புதுடெல்லி: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலிருந்து தமிழ்நாடு, புதுவை, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருக்கும் கோயில்களை மீட்டெடுத்து அந்தந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்கக்கோரி கோவையை சேர்ந்த தயானந்த சரஸ்வதி, குஜராத்தை சேர்ந்த பரமானந்த சரஸ்வதி, அதேப்போல் மும்பையை சேர்ந்த விஸ்வேஷ்வரானந்த், சுப்ரமணிய சுவாமி ஆகிய தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து வழக்கை முன்னதாக விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகரத்னா மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,”இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் அனைத்து சூழல்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். வெறும் சட்ட விவகாரத்தை மட்டுமே எடுத்துக் கொள்ளக் கூடாது.
குறிப்பாக மாநில அரசுகளின் கருத்துகளை கேட்காமல் எந்தவித முடிவையும் எடுக்க முடியாது என்பது மட்டுமில்லாமல், உத்தரவு பிறப்பிக்கவும் சாத்தியமில்லை. இந்த விவகாரத்தில் சட்ட பிரச்சனை இருந்தால் மனுதாரர்கள் உயர்நீதிமன்றத்தை முதலில் அணுகி இருக்கலாமே? ஒவ்வொரு சூழலையும் சரியாக ஆராயவும், கையாளவும் உயர்நீதிமன்றத்தால் கண்டிப்பாக முடியும். இந்த விவகாரம் தொடர்பாக ஏதேனும் நிபுணர் குழுவை அமைக்க விரும்பினால் உயர்நீதிமன்றம் அதனை மேற்கொண்டு நடவடிக்கையாக எடுக்கலாம் என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
The post தமிழ்நாடு அரசு கோயில்களுக்கு எதிரான வழக்கு உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: வழக்கை முடித்து வைத்து உத்தரவு appeared first on Dinakaran.