சென்னை : தமிழ்நாடு பாஜகவின் அடுத்த தலைவராகிறார் நயினார் நாகேந்திரன். தமிழ்நாடு பாஜக தலைவர் பதவிக்கு விருப்ப மனுவை நயினார் நாகேந்திரன் வழங்கினார். தேர்தல் நடத்தும் அதிகாரியும் மாநில துணைத்தலைவருமான சக்கரவர்த்தியிடம் விருப்ப மனுவை அளித்தார் நயினார் நாகேந்திரன். நயினார் நாகேந்திரனுக்கு எல்.முருகன், வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். தமிழகம் உள்பட நாடு முழுவதும் 19 மாநிலங்களில் புதிய தலைவர்களை நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகளிலும் பாஜக தேசிய தலைமை தீவிரம் காட்டி வருகிறது.
இந்தநிலையில், தமிழக பாஜக மாநில தலைவர் பதவிக்கான தேர்தல் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நாளை நடைபெற உள்ளது. இதற்கான விருப்ப மனுக்களை இன்று சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கான விருப்ப மனுக்களையும் தாக்கல் செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, மாநில துணைத்தலைவரும், தேர்தல் அதிகாரியுமான சக்ரவர்த்தி வௌியிட்டார்.
இந்தநிலையில், பாஜக மாநில தலைவர் பதவிக்கான விருப்ப மனு தாக்கல் சென்னையிலுள்ள கமலாலயத்தில் தொடங்கியது. பாஜக.தலைவர் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகம் மாலை 4 மணி வரை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர் பதவிக்கு தேர்தல் விருப்பமனு துவங்கிய நிலையில் இதுவரை யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை, நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்பமனு தாக்கல் செய்து உள்ளார். நயினார் நாகேந்திரன் விருப்ப மனுவில் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா ஆகியோர் பரிந்துரை செய்து கையெழுத்திட்டனர்.
வானதி சீனிவாசன், கனகசபாபதி, வி.பி.துரைசாமி, பொன் பாலகணபதி உள்ளிட்டோர் பரிந்துரை செய்தனர். இதற்கிடையில், நயினார் நாகேந்திரனுக்கு மட்டுமே விருப்ப மனு தாக்கல் செய்ய கட்சி தலைமை அனுமதி வழங்கியிருந்த நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்படி, தமிழ்நாடு பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post தமிழ்நாடு பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வாகியுள்ளார்: கட்சினர் வாழ்த்து! appeared first on Dinakaran.