டெல்லி: பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படும் இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றாகும். பத்ம விருதுகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. கல்வி, இலக்கியம், மருத்துவம், கலை, விளையாட்டு, சமூகப்பணி, வர்த்தகம், தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான சேவை மற்றும் சாதனைகளுக்காக பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. நடப்பாண்டில் பத்ம ஸ்ரீ விருது பெறும் 12 நபர்கள் அறிவிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சேர்ந்த பறை இசைக்கலைஞர் வேலு ஆசானுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தவில் இசைக்கலையில் 50 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் வாய்ந்த புதுச்சேரியைச் சேர்ந்த இசைக்கலைஞர் தட்சிணாமூர்த்திக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராலிம்பிக்கில் வில்வித்தைப் போட்டியில் தங்கம் வென்ற ஹரியாணாவைச் சேர்ந்த ஹர்விந்தர் சிங்குக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிதல், தடுப்பு மற்றும் மேலாண்மையில் சிறந்து விளங்கும் டெல்லியைச் சேர்ந்த மருத்துவ நிபுணரான டாக்டர் நீரஜா பட்லாவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அறக்கட்டளையின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 22 ஆண்டுகளாக உதவிவரும் பிகாரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பீம் சிங்குக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாகலாந்தைச் சேர்ந்த விவசாயி ஹாங்திங், இமாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி ஹரிமன் ஷர்மா இருவருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக தொழில்முனைவோர் சாலி ஹோல்கர், ஜக்தீஷ் ஜோஷிலா, மராத்தி எழுத்தாளர் மாருதி புஜங்ராவ் சிட்டம்பள்ளிக்கும் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத்தைச் சேர்ந்த யோகா பயிற்சியாளர் ஷெய்கா அல் சபாவுக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டைச் சேர்ந்த பறை இசைக் கலைஞர் வேலு ஆசானுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு appeared first on Dinakaran.