புதுடெல்லி: வக்பு மசோதாவை தாக்கல் செய்ய அரசு முழுமையாக தயாராக இருப்பதாக ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வக்பு வாரிய சொத்துக்களை நிர்வகிக்க, பல்வேறு சட்ட திருத்தங்களுடன், வக்பு வாரிய திருத்த மசோதாவை ஒன்றிய அரசு கொண்டு வர உள்ளது. இந்த மசோதா ஏற்கனவே மக்களையில் தாக்கல் செய்யப்பட்டு எதிர்க்கட்சி கடும் எதிர்ப்பால் நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அக்குழுவில் சில திருத்தங்களுடன் தற்போது இந்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதா அரசியலமைப்புக்கு விரோதமானது என ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இந்நிலையில், வக்பு மசோதா மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது குறித்து ஒன்றிய சிறுபான்மை விவகாரங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜூ நேற்று அளித்த பேட்டியில், ‘‘வக்பு மசோதாவுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த ரம்ஜான் பண்டிகையின்போது, இஸ்லாமியர்கள் கறுப்பு கைப்பட்டை அணியுமாறு அவர்களை தூண்டியது நாட்டிற்கு நல்லதல்ல. குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் இதே மாதிரி எதிரப்பு தூண்டப்பட்டது.
ஆனால் இதுவரை ஒரு முஸ்லிமாவது அந்த சட்டத்தில் குடியுரிமையை இழந்தாரா? பாஜ கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் இந்த மசோதாவை ஆதரிக்கின்றன. இதை விரைவில் சட்டமாக்க வலியுறுத்துகின்றன. வேறு எந்த மசோதாவும் இவ்வளவு விரிவான ஆலோசனை செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டதில்லை. வக்பு மசோதாவை தாக்கல் செய்ய அரசு முழு அளவில் தயாராக உள்ளது. இந்த மசோதா முஸ்லிம்களின் நலனுக்கானதே’’ என்றார்.
The post தயார் நிலையில் ஒன்றிய அரசு; வக்பு மசோதா நாளை தாக்கல்?: அமைச்சர் கிரண் ரிஜிஜூ தகவல் appeared first on Dinakaran.