பெங்களூரு: கர்நாடகாவின் தென்கனரா மாவட்டம் தர்மஸ்தலா கிராமத்தில் புகழ்பெற்ற மஞ்சுநாத ஸ்வாமி கோயில் உள்ளது. இந்த ேகாயில் முன்னாள் துப்புரவு பணியாளர் ஒருவர் பெலதங்கடி நீதிமன்றத்தில் ஜூலை 11ம் தேதி வழக்கறிஞர்கள் உதவியுடன் ஆஜராகி பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், நான் தர்மஸ்தா கோயிலில் வேலை பார்த்த போது 1995 முதல் 2014ம் ஆண்டு வரை நர்மதா ஆற்றங்கரையை சுற்றி நூற்றுக்கணக்கான சடலங்களை புதைக்க எனது மேற்பார்வையாளர்கள் மூலம் கட்டாயப்படுத்தப்பட்டேன்.
சில பெண்களை நிர்வாணமாகவும், முகத்தை அமிலம் ஊற்றி சிதைத்தும் புதை்துள்ளேன். இது குறித்து கேள்வி எழுப்பியதால் தொடர்ந்து எனக்கு மிரட்டல்கள் வந்ததால் வேறுமாநிலத்துக்கு குடும்பத்துடன் சென்று தஞ்சமடைந்தேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதால் 20 ஆண்டுக்கு முன்பு நடந்த சம்பவத்தை தற்போது புகாராக கூறியிருக்கிறேன். இதன் மீது காவல்துறை உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.
இவரது புகார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதற்கிடையில், தர்மஸ்தலாவில் அப்புறப்படுத்தப்பட்ட சடலங்கள் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள 4 ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் மாநில அரசு சிறப்பு புலானாய்வு குழு(எஸ்ஐடி) அமைத்துள்ளது.
இந்த விசாரணைகுழுவுக்கு டிஜிபியும் மூத்த போலீஸ் அதிகாரியுமான பிரணோவ் மொகந்தி தலைமை வகிப்பார். இவருக்கு உதவியாக ஏடிஜிபிக்கள் என்.எம்.அனுசேத், சவுமிய லதா மற்றும் ஜிதேந்திரகுமார் தயாமா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி தர்மஸ்தலா காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள பிற காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவாகும் அனைத்து குற்றவழக்குகளின் விசாரணையையும் இந்த சிறப்பு புலனாய்வு படைக்கு மாற்றுமாறு டிஜிபிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எஸ்ஐடி படை தங்களது விசாரணை மற்றும் நடவடிக்கை குறித்து அவ்வப்போது டிஜிபி மூலம் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தர்மஸ்தலா விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழு விரைவில் தங்கள் விசாரணையை தொடங்க உள்ளது.
The post தர்மஸ்தலாவில் உடல்கள் புதைக்கப்பட்ட விவகாரம் டிஜிபி தலைமையில் எஸ்ஐடி அமைத்து கர்நாடக அரசு உத்தரவு: விரைவில் விசாரணை தொடங்க முடிவு appeared first on Dinakaran.