பெங்களூரு: மாநிலத்தின் தர்மஸ்தலாவுக்கு சுற்றுலா வந்த தனது மகள் கடந்த 2003ல் காணாமல் போய்விட்டார். அவரை கண்டுப்பிடித்து கொடுக்க வேண்டும் என்று தாய், தென்கனரா மாவட்ட போலீஸ் எஸ்பியிடம் மனு கொடுத்துள்ளார். கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம், கொள்ளேகால் தாலுகாவை சேர்ந்த ஒருவர், கடந்த 4ம் தேதி தர்மஸ்தலா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் தர்மஸ்தலா கோயிலில் பணியாற்றினேன்.
நான் பணியில் இருந்தபோது, 100க்கும் மேற்பட்ட உடல்களை புதைத்ததாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும் கடந்த 11ம் தேதி வக்கீல்கள் மூலம் நீதிமன்றத்திற்கு வாக்குமூலம் கொடுத்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சுஜாதாபட் என்பவர் தென்கனரா மாவட்ட போலீஸ் எஸ்பி டாக்டர் அருணிடம் கொடுத்துள்ள புகார் மனுவில், எனது மகள் அனனியாபட், மணிபால் கஸ்தூரிபா மருத்துவ கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 2003ம் ஆண்டு அவருடன் படித்த தோழிகளுடன் தர்மஸ்தலாவுக்கு சுற்றுலா சென்றார்.
இதில் இருவர் பொருட்கள் வாங்க வெளியில் சென்று விட்டு, விடுதிக்கு திரும்பியபோது, எனது மகள் அனனியா பட் இல்லாததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து எனக்கு தகவல் கொடுத்தனர். நான் வந்து தர்மஸ்தலா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் அதை ஏற்காமல் புறக்கணித்து விட்டனர். கடந்த 22 ஆண்டுகளாக மகள் உயிருடன் உள்ளாரா? இல்லையா? என்று தெரியாமல் கவலையில் உள்ளோம்.
ஒரு வேளை எனது மகள் இறந்து விட்டிருந்தால், அவரது உடலை தோண்டி, டிஎன்ஏ பரிசோதனை செய்து, உறுதி செய்தால், எங்கள் பிராமண சமூக வழக்கத்தின்படி இறுதி சடங்கு செய்து, அவரின் ஆத்மாவுக்கு அமைதி கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்வோம் என்று கூறியுள்ளார். இது குறித்து தென்கனரா மாவட்ட போலீஸ் சூப்பிரெண்ட் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘கடந்த 2003ம் ஆண்டு தர்மஸ்தலா கோயில் வளாகத்தில் இருந்து அனன்யா பட் என்ற மருத்துவ மாணவி காணாமல் போய் உள்ளார். மாணவியின் தாய் அளித்த புகார் குறித்து சட்டப்படி உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள் ளது.
* எஸ்ஐடி அமைக்க முதல்வரிடம் வக்கீல்கள் குழு வலியுறுத்தல்
தர்மஸ்தாலாவில் நூற்றுக்கணக்கான பிணங்கள் குவிந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்.ஐ.டி) அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கர்நாடக வழக்கறிஞர்கள் முதல்வர் சித்தராமையாவைச் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post தர்மஸ்தலாவில் கடந்த 2003ம் ஆண்டுகளுக்கு முன் மாயமான மருத்துவ கல்லூரி மாணவியை கண்டுபிடிக்க வேண்டும்: போலீஸ் எஸ்பியிடம் தாய் மனு appeared first on Dinakaran.