புதுடெல்லி: மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் கருப்பு ஆடை அணிந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக நேற்று (மார்ச் 10) பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் பகுதி தொடங்கியது. அப்போது,தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் திமுக வேண்டுமென்றே அரசியல் செய்வதாக மக்களவையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடுமையாக விமர்சித்தார். ‘ஜனநாயகத்துக்கு விரோதமானவர்கள், அநாகரிகமானவர்கள்’ என்று அவர் பேசியதற்கு திமுக எம்.பி.க்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். அவர் மீது கனிமொழி எம்.பி. உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கியதை அடுத்து, தனது பேச்சை திரும்ப பெறுவதாக அமைச்சர் தெரிவித்தார்.