பாட்னா: “தலித் தலைவர்களுக்கு மரியாதை செய்வதன் மூலம் பாஜ மக்களை ஏமாற்றுகிறது. பாஜ, ஆர்எஸ்எஸ்-சால் அரசியல் சாசனம் தாக்கப்படுகிறது” என காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. பீகார் தலைநகர் பாட்னாவில் நேற்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலித் சுதந்திர போராட்ட வீரர் ஜக்லால் சவுத்ரியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது, “அரசியலமைப்பு சட்டம், டாக்டர். அம்பேத்கரின் சிலைக்கு முன்னால் பிரதமர் மோடி கும்பிடுவதை நாம் பார்த்திருக்கிறோம். அதேபோல் இன்று பல ஆர்எஸ்எஸ் தலைவர்கள் அம்பேத்கர் புகழ் பேசுவதை பார்க்க முடிகிறது.
ஆனால், அம்பேத்கர் முன்வைத்த கொள்கைகளுக்கு எதிராக பாஜவும், ஆர்எஸ்எஸ்-சும் செயல்படுகிறது. தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு பிரதிநிதித்துவம் தரப்படுவதாக பிரதமர் மோடி சொல்கிறார். ஆனால் தாழ்த்தப்பட்ட எம்எல்ஏ, எம்பிக்களிடம் இருந்து அனைத்து அதிகாரங்களையும் மோடி பறித்து விட்டார். மோடியின் அமைச்சர்கள் கூட ஆர்எஸ்எஸ் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகள் மூலம் செயல்படுகிறார்கள். தலித் தலைவர்களுக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்வது போல் மக்களை ஏமாற்றும் பாஜ, ஆர்எஸ்எஸ்-சால் அரசியல் சாசனம் தாக்குதலுக்குள்ளாகி வருகிறது” என கடுமையாக சாடினார்.
The post தலித் தலைவர்களுக்கு மரியாதை செய்வதாக ஏமாற்றும் பாஜ, ஆர்எஸ்எஸ்சால் அரசியல் சாசனம் தாக்கப்படுகிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.