திருவனந்தபுரம்: காஷ்மீர் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கொச்சியை சேர்ந்த ராமச்சந்திரன் (65) என்பவரும் உயிரிழந்தார். இவர் மனைவி ஷீலா, மகள் ஆரதி மற்றும் இவரது 6 வயதான இரட்டைக் குழந்தைகளுடன் காஷ்மீருக்கு சென்றிருந்தார். ராமச்சந்திரனின் உடல் நேற்று முன்தினம் இரவு கொச்சிக்கு கொண்டுவரப்பட்டது. தன்னுடைய கண்ணெதிரே தந்தை தீவிரவாதிகளால் சுடப்பட்டு இறந்தது குறித்து மகள் ஆரதி கூறியது: சம்பவத்தன்று மதியம் 2 மணியளவில் அம்மாவை ஓட்டலில் விட்டுவிட்டு நானும், குழந்தைகளும், அப்பாவும் பஹல்காமில் உள்ள பைசரன் பகுதிக்கு சென்றோம். நாங்கள் சென்ற 10 நிமிடத்திலேயே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கி விட்டனர். முதலில் ஏதோ ஒரு சத்தம் கேட்டது.
இதன் பின்னர் மீண்டும் வெடி சத்தம் கேட்டபோதுதான் ஏதோ விபரீதம் நடக்கிறது என்பதை நான் உணர்ந்தேன். சிறிது நேரத்தில் ஒரு நபர் எங்களுக்கு அருகே வந்து என்னுடைய அப்பாவிடம் கலிமா சொல்லுமாறு கூறினார். என்னவென்று புரியவில்லை என்று இரண்டு முறை என்னுடைய அப்பா சொன்னார். உடனே கண்ணிமைக்கும் நேரத்தில் அப்பாவை நோக்கி அந்த தீவிரவாதி சுட்டான். நான் அப்பாவை கட்டிப்பிடித்து கதறி அழுதேன். நான் அழுவதை பார்த்து என்னுடைய குழந்தைகளும் கதறின. அப்போது என்னுடைய தலைமீதும் யாரோ துப்பாக்கியை வைத்து அழுத்துவது தெரிந்தது.
இந்த சமயத்தில் என்னுடைய குழந்தைகள் கதறி அழுததால் தான் அந்த தீவிரவாதி என்னை சுடாமல் சென்றான். இதன்பின் நான் என்னுடைய குழந்தைகளை தூக்கிக் கொண்டு அங்கிருந்து ஓடினேன். சிறிது தூரம் சென்ற பின்னர் அங்கிருந்த உள்ளூர் மக்கள் எனக்கு மிகவும் உதவியாக இருந்தனர். அவர்கள் என்னை சொந்த தங்கையைப் போல பார்த்துக் கொண்டனர். அங்கிருந்த டிரைவர்களான முசாபிர், சமீர் ஆகியோர் செய்த உதவியை என்னால் மறக்க முடியாது. உங்களை அல்லா காப்பாற்றுவார் என்று கூறி நான் அங்கிருந்து புறப்பட்டு ஓட்டலுக்கு வந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.
* தந்தையின் சிதைக்கு தீ மூட்டிய 9 வயது மகன்
பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் ஒடிசாவை சேர்ந்த பிரசாந்த் சத்பதி(41) உயிரிழந்தார். மத்திய பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் மையத்தில் ஊழியராக பணியாற்றிய பிரசாந்த் சத்பதி குடும்பத்துடன் பஹல்காமுக்கு சென்றிருந்தார். அவரது இறுதி சடங்கு ஒடிசாவில் உள்ள பாலசோர் மாவட்டம்,இஷானி கிராமத்தில் நேற்று நடந்தது. இதில் மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி,அமைச்சர் பிபூதி பூஷன் ஜேனா கலந்து கொண்டு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் உடல் தகனம் செய்யப்பட்டது. பிரசாந்த் சத்பதியின் 9 வயது மகன் அனுஜ் குமார் சத்பதி தந்தையின் சிதைக்கு தீ மூட்டினான். இந்த காட்சி காண்போர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
* பாக். நடிகரின் திரைப்படத்துக்கு தடை
பாகிஸ்தானை சேர்ந்த நடிகர் பவாத் கான், பாலிவுட் நடிகை வீணா கபூர் ஆகியோர் நடித்துள்ள இந்தி திரைப்படம் அபிர் குலால். இந்த திரைப்படம் வரும் மே 9ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இப்படம் 2 நாடுகளின் எல்லைகளைக் கடக்கும் ஒரு காதல் கதையை மையமிட்டு எடுக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலையடுத்து அபிர் குலால் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த நிலையில் அபிர் குலால் படம் இந்தியாவில் திரையிட அனுமதி வழங்கப்படாது என்று அரசு வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.
* ஒரேநாளில் வௌியேறிய 10,000 சுற்றுலா பயணிகள்
தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து காஷ்மீர் வந்துள்ள சுற்றுலா பயணிகள் அவசரமாக வெளியேறி வருகின்றனர். சுற்றுலா பயணிகளை அழைத்து செல்ல ஸ்ரீநகரில் இருந்து டெல்லி, மும்பை நகரங்களுக்கு கூடுதலாக சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் நேற்று ஸ்ரீநகரில் இருந்து 110 விமானங்கள் இயக்கப்பட்டன. இதில் நேற்று இரவு 8 மணி வரை 10,090 சுற்றுலா பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
* தீவிரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர் வீரமரணம்
ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பசந்த்கர் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்து உளவுத்துறை தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் மாநில போலீசாருடன் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட பகுதியை வீரர்கள் சுற்றி வளைத்தனர். இதனை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை வெடித்தது. இதில் தீவிரவாதிகள் தாக்குதலில் வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். அந்த பகுதியில் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடந்து வருகின்றது.
* பலியானவர்களில் ஒருவர் மட்டுமே வெளிநாட்டவர்
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேரில் ஒருவர் மட்டுமே நேபாளத்தை சேர்ந்தவர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக உத்தரகாண்டை சேர்ந்த ஒருவர் ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்தவர் என அதிகாரிகள் பட்டியலில் குறிப்பிட்டு இருந்தனர். இந்நிலையில் வெளியுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களிடம் 25 இந்தியர்களும், நேபாளத்தை சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்ட தாக்குதல் குறித்த விவரங்களை அமைச்சரவை குழு வழங்கியதாக தெரிவித்தார்.
* பாக்.விசா சேவைகள் நிறுத்தம்
பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் நாட்டினருக்கு இந்தியா வழங்கிய அனைத்து செல்லுடியாகும் விசாக்களும் வருகிற 27ம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக வெளியுறவு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் மருத்துவ விசாக்கள் வருகிற 29ம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும் என்றும், இந்தியாவில் தங்கியிருக்கும் அனைத்து பாகிஸ்தானியர்களும் விசா காலாவதியாகும் முன் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்றும் வெளியுறவு துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் பாகிஸ்தானுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறும், பாகிஸ்தானில் இருப்பவர்கள் விரைவில் இந்தியா திரும்புமாறும் கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
* மேகாலயா எல்லையில் தீவிர பாதுகாப்பு
பஹல்காம் தாக்குதல் நடந்து இரண்டு நாட்களுக்கு பின் வங்கதேசத்துடனான சர்வதேச எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று மேகாலயா அரசு கேட்டுக்கொண்டுள்ளது. வாடிகன் செல்லும் முதல்வர் சங்மா, கொடூரமான பஹல்காம் தாக்குதல் கண்டிக்கத்தக்கது. மேகாலயாவில் உள்ள சர்வதேச எல்லை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது என்றார். எல்லைப்பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எல்லைப்பாதுகாப்பு படையினர் மற்றும் பிற பாதுகாப்பு படைகளுடன் நெருங்கிய ஒருங்கிணைப்பை பேணுமாறு காவல்துறை இயக்குனர் ஜெனரல் நோங்ராங்கிற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
* காஷ்மீருக்கு போகாதீங்க… அமெரிக்கா எச்சரிக்கை
அமெரிக்க வெளியுறவு துறையின் அமெரிக்க குடிமக்களுக்கான புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையில், ‘‘ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் வன்முறையின் காரணமாக உள்நாட்டு அமைதியின்மை சாத்தியமாகும். எனவே இங்கு அமெரிக்கர்கள் பயணம் செய்ய வேண்டாம். இங்கு அவ்வப்போது வன்முறை நிகழ்கின்றது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கட்டுப்பாட்டுக்கோட்டில் இதுபோன்ற சம்பவங்கள் பொதுவானது. நகர், குல்மார்க் மற்றும் பஹல்காமில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கிறது. ஆயுத மோதலுக்கான சாத்தியக்கூறுகள் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 10கிலோ மீட்டருக்குள் செல்வதை அமெரிக்கர்கள் தவிர்க்க வேண்டும்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
The post தலையில் துப்பாக்கி வைத்த தீவிரவாதி: உயிர் தப்பியது எப்படி? தந்தையை இழந்த கேரள பெண் பேட்டி appeared first on Dinakaran.