கன்னவுரி: தங்களின் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு அலட்சியப் போக்காக இருப்பதைக் கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வரும் ஜக்ஜித் சிங் தல்லேவாலுக்கு ஆதரவாக 111 விவசாயிகள் அடங்கிய குழு ஒன்று புதன்கிழமை சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியது. தல்லேவாலின் உண்ணாவிரத போராட்டம் 51-வது நாளை எட்டியுள்ளது கவனிக்கத்தக்கது.
பயிர்களுக்கும் சட்டபூர்வ குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சம்யுக்தா கிஷான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது) அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித் சிங் தல்லேவால் கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி முதல் பஞ்சாப் – ஹரியானா எல்லையில் உள்ள கன்னவுரியில், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகிறார். அவர் தனக்கு வழங்கப்பட்ட அனைத்து மருத்துவ உதவிகளையும் ஏற்க மறுத்துவிட்டார். இதனால், அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.