பரேலி: ‘கூகுள் மேப்ஸ்’-யை நம்பி ஏமாந்த 2 பிரான்ஸ் இளைஞர்கள் காத்மாண்டுக்கு பதில் உத்தரபிரதேச மாநிலம் பரேலி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரையன் ஜாக் கில்பர்ட், செபாஸ்டியன் ஃபிராங்கோயிஸ் கேப்ரியல் ஆகியோர் பிரான்சில் இருந்து கடந்த 7ம் தேதி விமானம் மூலம் டெல்லிக்கு வந்தனர். அவர்கள் இருவரும் உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட்டில் இருந்து தனக்பூர் வழியாக நேபாளத்தில் காத்மாண்டு செல்ல திட்டமிட்டிருந்தனர்.
இரு வெளிநாட்டவர்களும் ‘கூகுள் மேப்ஸ்’ உதவியுடன் தங்களது பயணத்தை தொடங்கினர். அதன்படி இருவரும் சைக்கிளில் ‘கூகுள் மேப்ஸ் ஆப்ஸ்’ பார்த்துக் கொண்டே பரேலியில் உள்ள பஹேரி வழியாக காத்மாண்டு செல்ல ஒரு குறுக்குவழியைக் காட்டியது. அந்த வழியை நம்பிய இருவரும் சைக்கிளில் சென்றனர். ஆனால் அந்த பாதை காத்மாண்டுக்கு போவதற்கு பதிலாக, சுரைலி அணையை அடைந்தது. அன்றிரவு முழுவதும் அப்பகுதியில் சுற்றி சுற்றி வந்துள்ளனர்.
இதைக்கண்ட அப்பகுதி கிராம மக்கள், இரண்டு வெளிநாட்டினர் சைக்கிளில் சுரைலி அணையை சுற்றி வருவதாக போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். ஆனால் போலீசார் இரு பிரான்ஸ் இளைஞர்களிடமும் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அங்குள்ள கிராம அதிகாரி வீட்டில் இருவரையும் தங்கவைத்து, பின் அவர்களுக்கு சரியான வழியைக்கூறி அவர்களை அனுப்பி வைத்துள்ளனர். ‘கூகுள் மேப்ஸ்’ பார்த்து பலர் ஏமாந்துள்ள நிலையில், தற்போது இரண்டு பிரான்ஸ் இளைஞர்களும் ஏமாந்துள்ளதை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
The post தவறாக வழிகாட்டிய மற்றொரு சம்பவம்; ‘கூகுள் மேப்ஸ்’-யை நம்பி ஏமாந்த 2 பிரான்ஸ் இளைஞர்கள்: காத்மாண்டுக்கு பதில் பரேலி சென்றது appeared first on Dinakaran.