திருவனந்தபுரம்: திருச்சூர் அருகே கோயில் திருவிழாவுக்கு வந்த யானை தாக்கி வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார். பாகன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள சிற்றாட்டுகரை பைங்கணிக்கல் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதற்காக கணேசன் என்ற யானை வரவழைக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை இந்த யானையை அதன் பாகன் அருகிலுள்ள ஆற்றில் குளிப்பாட்டி விட்டு கோயிலுக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த யானை மிரண்டு ஓடியது.
உடனடியாக பாகன் அந்த யானையை கட்டுப்படுத்த முயன்றபோது அது தும்பிக்கையால் பாகனை தூக்கி வீசிவிட்டு தொடர்ந்து ஓடியது. வழியில் சாலை ஓரத்தில் படுத்திருந்த ஆனந்தன் (45) என்ற வியாபாரியை அந்த யானை மிதித்தது. சுமார் ஒருமணி நேரம் அந்த யானை அப்பகுதியில் பிளிறியபடி ஓடி அனைவரையும் பீதியில் ஆழ்த்தியது. அதன் பின்னர் அந்த யானை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே பலத்த காயமடைந்த பாகனும், வியாபாரி ஆனந்தனும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆனந்தன் பரிதாபமாக உயிரிழந்தார். பாகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
The post திருச்சூர் அருகே கோயில் திருவிழாவுக்கு வந்த யானை தாக்கி வியாபாரி பலி: பாகன் படுகாயம் appeared first on Dinakaran.