சென்னை: திருச்செந்தூர் கடற்கரையில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலில் பக்தர்கள் எவ்வித சிரமமுமின்றி விரைந்து தரிசனம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடலோரத்தில் அமைந்துள்ளது என்பதும், இத்திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதும், சூரசம்ஹாரம், சஷ்டி போன்ற திருவிழாக் காலங்கள் உட்பட அனைத்து நாட்களிலும் பக்தர்கள் இங்குள்ள கடலில் நீராடிவிட்டு முருகப் பெருமானை வழிபடுவது என்பதும் வாடிக்கை.
இப்படிப்பட்ட பிரசித்திப் பெற்ற திருக்கோவிலை ஒட்டியுள்ள கடற்கரையில் கடந்த சில நாட்களாகவே அதிக அளவில் அரிப்பு ஏற்பட்டு வருவதாகவும், 20 அடி நீளத்திற்கும், 10 அடி ஆழத்திற்கும் கடலில் அரிப்பு ஏற்பட்டு மிகப் பெரிய பள்ளம் உருவாகியுள்ளதாகவும், இதனால் பக்தர்கள் நீராடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் பகுதியில் கற்கள் கொட்டப்படுவதால்தான் அரிப்பு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். திருச்செந்தூர் கடற்கரையைப் பொறுத்த வரையில், பவுர்ணமி, அமாவாசை போன்ற நாட்களில் கடல் உள் வாங்குவதும், பிற நாட்களில் கடற்கரையை தாண்டி கடல் நீர் வருவதும் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், கடந்த சில மாதங்களாக கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலை நீடித்தால் அடுத்த நான்கைந்து ஆண்டுகளுக்குள் திருச்செந்தூர் கோவிலில் உள்ள கந்த புஷ்கரணி எனப்படும் நாழிக் கிணறு வரை கடல் அலை வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனைத் தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசுக்கு உள்ளது. இந்தப் பிரச்சனைக்குத் நிரந்தரத் தீர்வு காண I.I.T. நிபுணர்கள் குழுவுடன் ஆய்வு செய்திருப்பதாகவும், இதனுடைய அறிக்கையின் அடிப்படையில் அரசிடமிருந்து நிதியைப் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டாலும், அப்பகுதி மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பக்தர்களின் கருத்தினையும் கேட்டு, ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இதனைத் தடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இதேபோன்று, திருச்செந்தூர் முருகப் பெருமானை தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து தரிசித்துச் செல்வதால், பக்தர்கள் எவ்வித சிரமமுமின்றி விரைந்து தரிசனம் மேற்கொள்ளவும், அங்கு அவர்களுக்குத் தேவையான தண்ணீர் வசதி, காற்றோட்ட வசதி, கழிப்பிட வசதி போன்றவற்றை மேற்கொள்ளவும் கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு பக்தர்களிடையே உள்ளது. முதல்வர் இதில் தனிக் கவனம் செலுத்தி, திருச்செந்தூரில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பைத் தடுக்கவும், பக்தர்களுக்கு விரைந்து தரிசனம் கிடைக்கவும், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
The post திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.