திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசிக்காக நேற்று ஜீயர்கள் முன்னிலையில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க ஆகம முறைப்படி 12.45 மணிக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு திருப்பாவை பாசுரம் நடைபெற்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது, கோயிலில் கூடியிருந்த பக்தர்கள், கோவிந்தா, கோவிந்தா என விண்ணதிர முழக்கமிட்டனர். பின்னர் ஏராளமான பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சென்று ஏழுமலையானை தரிசித்தனர். காலை 9 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி 32 அடி உயரம் கொண்ட தங்க ரதத்தில் பெண்கள் வடம் பிடித்து இழுக்க நான்கு மாடவீதிகளில் பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா பக்தி முழக்கத்திற்கு மத்தியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இரவு 7 மணிக்கு அதியாயன உற்சவத்தில் இராபத்து உற்சவம் நடைபெற்றது.
வைகுண்ட ஏகாதசியையொட்டி முன்பு வரும் 11 நாட்கள் 12 ஆழ்வார்கள் எழுதிய நான்காயிரம் திவ்ய பிரபந்தத்தில் இருந்து 3000 திவ்ய பிரபந்தம் பாசுரங்கள் பகல் பத்து உற்சவமாக ரங்கநாதர் மண்டபத்தில் பாராயணம் செய்யப்பட்டது.
நேற்று இரவு முதல் 10 நாட்களுக்கு ராபத்து உற்சவம் தொடங்கப்பட்டது. இதில் நம்மாழ்வார் எழுதிய பாசுரங்களில் ஒரு நாளைக்கு 100 பாசுரங்கள் என பாராயணம் செய்யப்பட உள்ளது. இரவு 12 மணி வரை தொடர்ந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். வைகுண்ட துவாதசியையொட்டி இன்று காலை 5 மணிக்கு ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. தொடர்ந்து ஜனவரி 19ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். தரிசன டோக்கன், டிக்கெட் இல்லாத பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய முடியாது. திருமலைக்கு வரலாம் என தேவஸ்தானம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
The post திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு: விண்ணதிர கோவிந்தா பக்தி முழக்கமிட்ட பக்தர்கள் தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா appeared first on Dinakaran.