டெல்லி : திருமணத்தை ஏற்க மறுப்பதை மட்டும் தற்கொலைக்கு தூண்டும் குற்றமாக கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தற்கொலைகளுக்கு எதிராக ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நாடு முழுவதும் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர். மேலும் பிறரை தற்கொலைக்கு தூண்டுபவர்களுக்கு சட்டமும் 7 ஆண்டுகள் சிறை, அபராதம் ஆகிய தண்டனைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் இளம் பெண் ஒருவர் தனக்கு அறிமுகமான பாபு தாஸ் என்ற இளைஞரை காதலித்து வந்த நிலையில், அவர்களின் திருமணத்திற்கு சம்பந்தப்பட்ட இளைஞரின் தாயார் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண்ணை திருமணம் செய்ய பாபு தாஸ் மறுத்ததால், விரக்தியில் அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் உறவினர் தொடர்ந்த வழக்கில், சம்பந்தப்பட்ட இளைஞர் அவரது தாயார் லட்சுமி தாஸ் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி, இளைஞரின் தாயார் கொல்காத்தா நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அவரது தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இளைஞரின் தாயார் திருமணத்தை ஏற்க மறுத்ததும், அந்த பெண் குறித்து இழிவாக பேசியதுமே அவரது தற்கொலை முடிவிற்கு காரணம் என்று சுட்டிக் காட்டினார். ஆனால் இதனை நிராகரித்த நீதிபதிகள், திருமணத்தை ஏற்க மறுத்தது மற்றும் அதற்கு எதிராக கருத்து தெரிவித்ததை மட்டுமே தற்கொலைக்கு தூண்டிய குற்றமாக கருத முடியாது எனக்கூறி வழக்கில் இருந்து லட்சுமி தாஸை விடுவித்து உத்தரவிட்டனர்.
The post திருமணத்தை ஏற்க மறுப்பதை மட்டும் தற்கொலைக்கு தூண்டும் குற்றமாக கருத முடியாது : உச்சநீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.