திருவனந்தபுரம்: கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய காதலி, தம்பி, பாட்டி உள்பட 5 பேரை சுத்தியலால் அடித்து கொலை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட வாலிபர் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். திருவனந்தபுரம் மாவட்டம் வெஞ்ஞாரமூடு அருகே உள்ள பேருமலை பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரகீம். இவரது மனைவி ஷெமி. இவர்களது மகன்கள் அபான் (23), அப்னான் (13). அப்துல் ரகீம் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன் வெஞ்ஞாரமூடு போலீஸ் நிலையத்திற்கு சென்ற அபான், தான் 6 பேரை கொலை செய்ததாக கூறினார்.
அதிர்ச்சியடைந்த போலீசார் நடத்திய விசாரணையில் அங்குள்ள பாங்கோடு, பேருமலை மற்றும் புல்லன்பாறை ஆகிய இடங்களில் இவர் தன்னுடைய தாய் ஷெமி, தம்பி அப்சான், காதலி பர்சானா, பாட்டி சல்மா பீவி, பெரியப்பா அப்துல் லத்தீப், பெரியம்மா சஜிதா பீவி ஆகியோரை சுத்தியலால் தாக்கியது தெரியவந்தது. இதில் ஷெமி தவிர மற்ற 5 பேரும் உயிரிழந்தனர். இதற்கிடையே தான் எலி விஷம் சாப்பிட்டதாக அபான் கூறியதை தொடர்ந்து அவரை போலீசார் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்தக் கொடூர கொலைகளுக்கு கடன் தொல்லை தான் காரணம் என்று தெரியவந்தது. ஷெமிக்கு ரூ.65 லட்சம் கடன் இருந்ததாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்ததால் தாய், தம்பியுடன் சேர்ந்து விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ள தீர்மானித்ததாகவும், ஆனால் தற்கொலை முயற்சியில் யாராவது உயிர் பிழைத்து விடுவார்களோ என்று பயந்து அவர்களை கொலை செய்ய முடிவெடுத்ததாகவும் அபான் போலீசிடம் கூறினார்.
தாங்கள் கடன் தொல்லையால் கஷ்டப்படும்போது பாட்டி, பெரியப்பா, பெரியம்மா ஆகியோர் எந்த உதவியும் செய்யாமல் ஏளனம் செய்ததால் தான் அவர்களை கொன்றதாகவும், தான் இறந்த பின்னர் காதலி பர்சானா வேதனைப்படுவார் என்பதால் அவரையும் கொலை செய்ய தீர்மானித்ததாகவும் அபான் போலீசிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதற்கிடையே தீவிர சிகிச்சைக்குப் பின் அபான் உடல்நலம் தேறினார். இதையடுத்து நேற்று நெடுமங்காடு மாஜிஸ்திரேட் அக்ஷயா திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்று அபானை 14 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். தற்போதைக்கு அவரை போலீசார் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனை யில் உள்ள கைதிகளுக்கான வார்டில் வைத்துள்ளனர்.
The post திருவனந்தபுரம் அருகே 5 பேரை கொன்ற வாலிபருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் appeared first on Dinakaran.