திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்றுவந்த 4வது புத்தக திருவிழா நிறைவுநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் தலைமை வகித்தார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நாதம் கீதம் பப்ளிகேசன் செயலாளர் எஸ்.கே.முருகன் முன்னிலை வகித்தார். இதில் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டு “புத்துலகின் திறவுகோல் புத்தகம்” என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். முன்னதாக சிறப்பு விருந்தினர்கள் பத்ம கவிப்பேரரசு வைரமுத்துவை மாவட்டகலெக்டர் மு.பிரதாப் கௌரவித்து சிறப்பு செய்தார்.
வைரமுத்துவின் எழுத்துகள் மற்றும் சிந்தனைகள் கடைக்கோடி கிராமத்திற்கும் செல்லும் வகையில் கிராமபுற நூலகங்கள் பள்ளி நூலகங்கள் மற்றும் பள்ளி விடுதிகளில் உள்ள நூலகங்களுக்கு புத்தகங்களை வழங்கும் பொருட்டு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர்கள் விடுதி, அமிர்தாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கும், ஆண்டார்குப்பம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படும் நூலகத்திற்கும் வழங்கினார்.
புத்தக திருவிழாவில் ரூ.52 லட்சம் மதிப்பிலான வரலாறு, இலக்கிய, சிறுவர்களுக்கான புத்தகம் போன்ற பல்வேறு வகையான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் புத்தக அரங்கிற்கு வருகை புரிந்துள்ளனர். லட்சக்கணக்கான வாசகர்கள் புத்தக அரங்கிற்கு வருகை புரிந்துள்ளதாக மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் தெரிவித்தார். தினந்தோறும் சிந்தனை அரங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட எழுத்தாளர்களை கவுரவிக்கும் விதமாக எழுத்தாளர் செங்கதிர் சண்முகத்தை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கவுரவிக்கப்பட்டார்.
The post திருவள்ளூரில் புத்தக திருவிழா நிறைவு; கவிஞர் வைரமுத்து பங்கேற்பு appeared first on Dinakaran.