சென்னை: திறன்மிகு வகுப்பறை திட்டத்தின்கீழ் 7 மாதங்களில் 22,931 ஸ்மார்ட் போர்டுகளை அமைத்து பள்ளிக்கல்வித்துறை சாதனை படைத்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது; “அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல. அது பெருமையின் அடையாளம்” என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
தொழில்நுட்ப வளர்ச்சியை வகுப்பறைக்குள்ளும் கொண்டு செல்லும் முயற்சியாக, நமது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில்நுட்பத்துடன் கூடிய கற்றல் சூழலை உருவாக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளிகளில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கும் பணியை 14.06.2024 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கிவைத்தார்.
அதன் தொடர்ச்சியாக இன்று 22931ஆவது திறன்மிகு வகுப்பறையினை சென்னை ஒக்கியம் துறைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நிறுவி மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தோம்.
அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 11,76,452 மாணவர்கள் பயனடையும் வகையில், ரூ.455.32 கோடி மதிப்பீட்டில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் நிறுவப்பட்டுள்ளது. இதுதான் திராவிடமாடல்
அரசுப் பள்ளிகளில் அறிவியல் புரட்சியை நடத்திக்கொண்டிருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு மாணவர்கள், ஆசிரியப் பெருமக்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post திறன்மிகு வகுப்பறை திட்டத்தின்கீழ் 22,931 ஸ்மார்ட் போர்டுகளை அமைத்து பள்ளிக்கல்வித்துறை சாதனை: அமைச்சர் அன்பில் மகேஸ் appeared first on Dinakaran.