திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தின் 2ம் நாளான இன்று காலை அலங்கார ரூபத்தில் சந்திரசேகரர் தங்க சூரிய பிரபை வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்றிரவு நடந்த உற்சவத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து பஞ்ச மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு விநாயகர் மூஷிக வாகனத்திலும், வள்ளிதெய்வானை சமேத முருகர் மயில் வாகனத்திலும், அண்ணாமலையார்பிரியாவிடை அதிகார நந்தி வாகனத்திலும், உண்ணாமுலையம்மன் அன்ன வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் நந்திவாகனத்திலும் எழுந்தருளினர். மாட வீதியில் பவனி வந்த பஞ்சமூர்த்திகளை கொட்டும் மழையை பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நள்ளிரவு வரை திரண்டிருந்து தரிசனம் செய்தனர்.
தீபத்திருவிழாவின் 2ம் நாள் உற்சவம் இன்று காலை நடந்தது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. தரிசனத்துக்காக அதிகாலையில் இருந்தே கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். காலை 11 மணி அளவில் 2ம் நாள் உற்சவ புறப்பாடு நடந்தது. அதையொட்டி ராஜகோபுரம் எதிரில் இருந்து மங்கள இசையும், சங்கொலியும் முழங்க, மூஷிக வாகனத்தில் விநாயகரும், தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரரும் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
சூரியன், சந்திரன் இயக்கத்தால், உலகம் நிலைத்துள்ளது என்பதை உணர்த்துவதே சூரியபிரபை வாகனத்தின் தத்துவம். அனைத்து உயிர்களையும், அண்ட சராசரங்களையும் காக்கும் இறைவனாகிய பரம்பொருள், சூரிய, சந்திர கோள்களுக்கு இடையே ஞானம்பெறும் தீச்சுடராக விளங்குவதால் இரவும், பகலும், தட்ப வெட்பமும் உண்டாகிறது என்பதே இந்த வாகனத்தின் உட்பொருளாகும். இதைத்தொடர்ந்து தீபத்திருவிழா இரவு உற்சவம் 9 மணியளவில் நடைபெற உள்ளது.
The post தி.மலை தீபத்திருவிழாவின் 2ம் நாளான இன்று சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரர் பவனி: ஏராளமான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.