இந்தியா, கட்டுரை, சிந்தனைக் களம், பொருளாதாரம், வர்த்தகம்

விலைவாசி உயர்வைத் தடுக்க என்ன செய்யப்போகிறது அரசு?

அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக தமிழகத்தில் ஓடும் சரக்கு லாரிகளுக்கான கட்டணங்கள் 25% உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 4 லட்சம் சரக்கு லாரிகள் ஓடுகின்றன. காய்கறிகள், மளிகைச் சாமான்கள் என்று உணவுப் பொருள்களின் வணிகம் லாரிகளை மையமாகக் கொண்டே நடந்துவருகிறது. ஏற்கெனவே பெட்ரோல், டீசல் கட்டணத்தால் பஸ் கட்டண உயர்வு, ஷேர் ஆட்டோ கட்டண உயர்வையும் சந்தித்துவரும் சாமானிய மக்கள், அடுத்து உணவுப் பொருட்களின் விலையேற்றத்தையும் சந்திக்க வேண்டியிருக்கும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பதைக் காரணம் காட்டி, மத்திய – மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை நியாயப்படுத்துவதைக் கைவிட்டு, சாமானிய மக்களை அந்தச் சுமையிலிருந்து மீட்டெடுப்பது எப்படி என்பதைப் பற்றி ஆலோசிக்க வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது வாகனச் செலவோடு முடிந்துவிடுவதில்லை. வேளாண்மை, தொழில்துறை, சேவைப்பணித் துறை என்று பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையிலும் இந்த விலை உயர்வு உற்பத்திச் செலவை அதிகப்படுத்தி, உற்பத்திப் பண்டங்களின் விலை உயர்விலும் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் பெட்ரோல், டீசலின் விலை 238% விலை உயர்ந்திருக்கிறது. அதற்கேற்ப விலைவாசியும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. எரிபொருள் விலை உயர்வின் காரணமாக உயர்ந்துகொண்டிருக்கும் இந்த விலைவாசி உயர்வை பணவீக்கக் கோட்பாடுகளின் வழியாக நியாயப்படுத்தக் கூடாது.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வை அடுத்து, உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருக்கிறது. ஆனால், ஆசிய நாடுகளில் இந்தியா அளவுக்கு எந்த நாட்டிலும் விலை உயர்வு இல்லை. மத்திய அரசு விதிக்கும் கலால் வரி, மாநில அரசு விதிக்கும் வாட் வரி ஆகியவையே இந்த விலை உயர்வுக்குக் காரணம். பெட்ரோல், டீசல் மீது அரசு விதிக்கும் வரிகளைத் தளர்த்திக்கொண்டால், அவற்றின் விலையை 30% குறைக்க முடியும். ஆனால், அரசு அந்தப் பொறுப்பைத் தவிர்த்து, மக்களின் மீதே சுமையை ஏற்றிவைத்துக்கொண்டிருக்கிறது.

தமிழகத்தின் பக்கத்து மாநிலங்களான கேரளம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் ஆகியவற்றில் டீசல் விலையில் ரூ.2 முதல் 4 வரை குறைத்துள்ளனர். தமிழகமும் அதைப் பின்பற்றி டீசல் விலையைக் குறைக்கும் நடவடிக்கையில் இறங்க வேண்டும். தற்போது லாரி கட்டணங்களின் விலை உயர்வால் உற்பத்திப் பொருட்களின் விலை 5% வரையில் உயரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மாநில அரசு இதுகுறித்து உடனடி அக்கறை செலுத்த வேண்டியது அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *