டெல்லி: ஏஐ தொழில்நுட்பம் மூலம் மோடி – நெதன்யாகு இணைந்துள்ள ‘கிப்லி’ ஆர்ட் ஒன்றை இஸ்ரேல் தூதரகம் வெளியிட்டு இருநாட்டின் உறவை குறிப்பதாக விளக்கம் அளித்துள்ளது. சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளங்களில் தற்போது ட்ரெண்டிங்கில் ‘கிப்லி’ ஆர்ட் எனப்படும் அனிமேஷன் புகைப்படங்கள்தான். ஜப்பானைச் சேர்ந்த ‘ஸ்டூடியோ கிப்லி’ என்ற நிறுவனம் தயாரித்த அனிமேஷன் திரைப்படங்கள் உலகம் முழுவதும் பிரபலமானவை. இந்த கிப்லி ஸ்டைல் படங்களுக்கு உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் சாதாரண டிஜிட்டல் புகைப்படங்களை சில நொடிப்பொழுதில் கிப்லி அனிமேஷன் புகைப் படங்களாக மாற்றிவிடும் அப்டேட் வந்துள்ளது. அந்த அப்டேட்தான் இன்றைய சமூக வலைதளங்கள் முழுவதும் கிப்லி புகைப்படங்களாக நிறைய வைத்துள்ளது.
ஓபன் ஏஐ நிறுவனத்தில் சாட் ஜிபிடி மூலமும், எலான் மஸ்க்கின் எக்ஸ் தளத்தில் உள்ள ‘க்ரோக்’ மூலமும் இந்த கிப்லி அனிமேஷன் புகைப்படங்களை செய்துவிட முடிகிறது. இந்த ஆர்ட் புகைப்படம் பார்ப்போரை கவரும் வண்ணம் உள்ளதால், அனைவரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். சமூக வலைதளங்களில் தான் சக்கைபோடு போடும் கிப்லி அனிமேஷன் புகைப்படங்கள் அரசியல்வாதிகளையும் கவர்ந்துள்ளன. ஒன்றிய அரசின் அதிகாரபூர்வ சமூக வலைதளங்களில், பிரதமர் மோடியின் 15 கிப்லி அனிமேஷன் படங்கள் பதிவிடப்பட்டுள்ளன. இந்த கிப்லி அனிமேஷன் ட்ரெண்டிங்கில் உள்ளதால், பல தனியார் நிறுவனங்களும் இந்த கிப்லி புகைப்படங்களை மாற்றும் செயலியை உருவாக்கி வருகின்றன. எனவே, இந்த செயலிகளில் தங்களது தரவுகளை உள்ளீடு செய்யும்போது, தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து பயன்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருப்பது அவசியமாகிறது.
இந்நிலையில் டெல்லியில் இருக்கும் இஸ்ரேல் தூதரகம் நேற்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில் பிரதமர் மோடிக்கும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் இடையிலான நட்பை வெளிப்படுத்தும் விதமாக அழகான ‘கிப்லி’ ஆர்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அந்த பதிவில் மற்றும் இரு நாடுகளின் கொடியுடன் கூடிய இரு தலைவர்களுக்கும் இடையிலான பிணைப்பைப் படம்பிடித்து, இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான வலுவான உறவுகளைக் குறிக்கும் வகையில் பதிவிட்டுள்ளது. இந்தியாவும் இஸ்ரேலும் பாதுகாப்பு, தொழில்நுட்பம் முதல் வர்த்தகம் மற்றும் விவசாயம் வரை பல்வேறு துறைகளில் வலுவான உறவை வைத்துள்ளதையும் காட்டியுள்ளது.
The post தீயாய் பரவும் ஏஐ தொழில்நுட்பம்; இஸ்ரேல் தூதரகம் வெளியிட்ட ‘கிப்லி’ ஆர்ட்: இருநாட்டின் உறவை குறிப்பதாக விளக்கம் appeared first on Dinakaran.