புதுடெல்லி: தீவிரவாதிகள் இனி தாக்கினால் உடனே பதிலடி கொடுக்கப்படும் என்று விமானப்படை வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். பாக். எல்லையில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் ஆதம்பூர் விமானப்படை தளத்துக்கு பிரதமர் மோடி நேற்று திடீரென சென்றார். அங்கு விமானப்படை வீரர்களை சந்தித்து அவர்களிடம் உற்சாகமாக உரையாடினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ஈடுபட்ட வீரர்கள் இந்தியாவின் எதிர்கால சந்ததியினருக்கு ஓர் உத்வேகமாக மாறிவிட்டனர்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது அனைத்து இந்தியர்களும் வீரர்களுடன் நின்று அவர்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்தனர். ஆபரேஷன் சிந்தூர் ஒரு வழக்கமான ராணுவ நடவடிக்கை அல்ல. இது இந்தியாவின் கொள்கை, நோக்கம் மற்றும் தீர்க்கமான வலிமையின் உருவகமாகும். பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை ரத்தம் சிந்த வைத்தால் அது அழிவை மட்டுமே அழைக்கும் என்பதை ஆபரேஷன் சிந்தூர் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த பயங்கரவாதிகளின் ஆதரவை நம்பியிருந்த பாகிஸ்தான் ராணுவத்தையும் இந்திய ராணுவம் தோற்கடித்துவிட்டது.
இது புதிய இந்தியா, இந்த இந்தியா அமைதியை நாடுகிறது. ஆனால் மனிதகுலம் தாக்கப்பட்டால், போர்க்களத்தில் எதிரியை எப்படி நசுக்குவது என்பதும் அதற்குத் தெரியும்.நீதி நிலைநாட்ட ஆயுதம் ஏந்துவது இந்திய பாரம்பரியம். நமது சகோதரிகள் மற்றும் மகள்களின் குங்குமம் அழிக்கப்பட்டபோது, பயங்கரவாதிகளை அவர்களின் மறைவிடங்களில் நசுக்கினோம். பாகிஸ்தானின் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அடிபணியாது. அதிநவீன தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்ட நமது திறனை பாகிஸ்தானால் ஈடுகட்ட முடியாது.
ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் ஆழமாக வேரூன்றிய பயங்கரவாத முகாம்களை நமது விமானப்படை குறிவைத்தது. பாகிஸ்தானை இந்தியாவின் ஏவுகணைகள் தூங்க விடவில்லை. பாகிஸ்தான் தனது வான்வெளியில் பொதுமக்கள் பயணிக்கும் விமானங்களை பறக்கவிட்டது. நமது வீரர்களுக்கு இது ஒரு கடினமான தருணமாக இருந்திருக்கும். பயணிகள் விமானங்களை சேதப்படுத்தாமல் இந்திய ஆயுதப் படைகள் தங்கள் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றின. நமது விமான தளங்களை அழிக்க எதிரி எடுத்த ஒவ்வொரு முயற்சியும் பயனற்றதாகியது.
பாகிஸ்தானின் டிரோன்கள், அவர்களின் யுஏவி, விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் அனைத்தும் நமது வான் பாதுகாப்பு கட்டமைப்பால் முறியடிக்கப்பட்டன. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் லட்சுமண ரேகை இப்போது தெளிவாக உள்ளது. பயங்கரவாதத்தின் ஒவ்வொரு செயலுக்கும் இனி உடனடி பதிலடி கொடுக்கப்படும். ஆபரேஷன் சிந்தூர் இனி இந்தியாவின் புதிய வழக்கமாக இருக்கும். பயங்கரவாதம் உங்கள் மண்ணில் தொடர்ந்தால் நீங்கள் அழிக்கப்படுவீர்கள். பயங்கரவாதிகள் பாதுகாப்பாக உணர பாகிஸ்தானில் எந்த இடமும் இல்லை. அவர்களின் மறைவிடங்களில் அவர்களைக் கொன்றுவிடுவோம், தப்பிக்க வாய்ப்பே இல்லாமல் செய்வோம். இவ்வாறு பேசினார்.
The post தீவிரவாதிகள் தாக்கினால் இனிமேல் உடனே பதிலடி: விமானப்படை வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை appeared first on Dinakaran.