கோவை: தீவிரவாத ஒழிப்பால் காஷ்மீரில் வெள்ளை ரோஜாக்கள் மலர்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்து உள்ளார். கோவை விமான நிலையத்தில் பாஜ மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீதான நம் ராணுவ வீரர்களின் துணிச்சலான தாக்குதல் நடவடிக்கைக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். `ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு காரணமாக பிரதமர் மோடிக்கு நாடு துணை நிற்கிறது.
காஷ்மீரில் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டு அமைதி நிலவும். முன்பு ரத்தத்தால் சிவந்த ரோஜாக்கள் தற்போது வெள்ளை ரோஜாக்களாக மலரும். ஆனால், தமிழகத்தில் சிலர் இந்த பாதுகாப்பு நடவடிக்கையை விமர்சிப்பது வேதனை அளிக்கிறது. இந்த தாக்குதல் குறித்து பெண் அதிகாரிகள் விளக்கம் அளித்தது, பிரதமர் பெண்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை காட்டுகிறது. ராணுவத்தில் பெண்கள் பைலட்டுகளாக இருப்பது பெருமையாக இருக்கிறது.
தீவிரவாத தாக்குதலை எந்த ரூபத்தில் வந்தாலும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது. முதலில் நம் நாடு நமக்கு முக்கியம். நாட்டின் பாதுகாப்பு தான் முக்கியம். இதில் யாருக்கும் இரக்கம் காட்ட முடியாது. இந்திய பெண்கள் துப்பாக்கி ஏந்தி போராடுவது பெருமை அளிக்கிறது. இந்த தாக்குதல் குறித்து மாற்று கருத்து கூறுவது கண்டிக்கத்தக்கது. அனைவரும் நாட்டுப்பற்றுடன் ஒன்றிணைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
The post தீவிரவாத ஒழிப்பால் காஷ்மீரில் வெள்ளை ரோஜாக்கள் மலர்கிறது: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி appeared first on Dinakaran.