பெங்களூரு: துபாயிலிருந்து பெங்களூருவிற்கு 14.8 கிலோ தங்கத்தை தொடையில் ஒட்டி கடத்தி வந்த நடிகை ரன்யா ராவ் விமான நிலையத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். கடந்த ஓராண்டில் மட்டும் 30 முறை துபாய்க்கு ரன்யா ராவ் சென்று வந்திருக்கிறார். கடந்த 15 நாட்களில் மட்டுமே 4 முறை துபாய் சென்றுவர, அவர் மீது சந்தேகமடைந்த வருவாய் புலனாய்வு அதிகாரிகள், துபாயிலிருந்து பெங்களூரு விமான நிலையத்தை வந்தடைந்தபோது, அவரைப் பரிசோதித்ததில், அவர் தொடையில் ஒட்டி கடத்தி வந்த 14.8 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
பின்னர் பெங்களூரு லாவெல்லி சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2.06 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ரூ.2.67 கோடி ரொக்கம் உள்ளிட்ட ரூ.7.29 கோடி மதிப்பு சொத்துக்களை பறிமுதல் செய்தனர். காவல் துறை உயரதிகாரியின் மகளான ரன்யா ராவ், அவரது பெயரைப் பயன்படுத்தியே பெங்களூரு விமான நிலையத்தில் சோதனையிலிருந்து தப்பித்து தங்கத்தை கடத்தி வந்திருக்கிறார்.
ஒரு முறை துபாயிலிருந்து தங்கத்தை கடத்தி வர ரூ.12-15 லட்சம் வரை கமிஷன் வாங்கியிருக்கிறார். கடந்த 15 நாட்களில் 4 முறை துபாய்க்கு சென்று வந்ததால் வசமாக சிக்கிக்கொண்டார். தங்கம் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ரன்யா ராவ் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். தற்போது ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை அவர் நாடியுள்ளார். அந்த மனுவை விசாரித்த பொருளாதார குற்றங்களுக்கான நீதிமன்றம் ஜாமீன் வழங்கமுடியாது என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தது.
The post துபாயிலிருந்து பெங்களூருவுக்கு தங்கம் கடத்தி வர ரூ.15 லட்சம் சம்பளம் பெற்ற ரன்யா ராவ் appeared first on Dinakaran.