டெல்லி: ”கடந்த 19 நாட்களுக்கு பிறகு நேற்றிரவு இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் அமைதியான சூழல் நிலவியது” என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, கடந்த 7ம் தேதி இந்தியாவின் முப்படைகளும் இணைந்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தின. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் 15க்கும் மேற்பட்ட நகரங்களையும் பொதுமக்களையும் குறிவைத்து டிரோன் மற்றும் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்த முயன்றது.
ஆனால் இந்தியாவின் வலுவான வான் பாதுகாப்பு அமைப்புகள், அவற்றை வானிலேயே வழிமறித்து அழித்தன. இரு நாடுகளுக்கு இடையே 4 நாட்களாக மோதல் நடந்த நிலையில், அமெரிக்காவின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, நேற்று முன்தினம் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் மோதலை நிறுத்திக் கொள்வதாக இந்தியாவும், பாகிஸ்தானும் அறிவித்தன. இதனிடையே நேற்றிரவு ஜம்மு-காஷ்மீர் மற்றும் பிற பகுதிகளில் பெரும்பாலும் அமைதியாக இருந்தது. கடந்த 19 நாட்களுக்கு பிறகு நேற்றிரவு எல்லையில் ட்ரோன்கள், ஏவுகணைகள் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஏதும் நிகழவில்லை. அமைதியான சூழல் நிலவியது”என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இன்று நண்பகல் 12 மணிக்கு இந்தியா -பாக். ராணுவ தலைமை இயக்குநர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதை பாகிஸ்தான் உறுதி செய்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் பாகிஸ்தானில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 40 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post துப்பாக்கிச்சூடு இல்லை, ட்ரோன்கள், ஏவுகணைகள் தாக்குதல் இல்லை.. 19 நாட்களுக்கு பிறகு எல்லையில் அமைதியான சூழல் : இந்திய ராணுவம் appeared first on Dinakaran.