திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் அருகே முன்விரோதத்தில் பாஜ பிரமுகர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கேரள மாநிலம் கண்ணூர் அருகே மாதமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (51). சரக்கு ஆட்டோ டிரைவர் ஆவார். மாதமங்கலம் பகுதி பாஜ தலைவராகவும் இருந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். அவரிடம் துப்பாக்கி லைசென்ஸ் உள்ளது. மாதமங்கலம் பகுதியில் காட்டுப் பன்றிகள் தொல்லை அதிகமாகும். இதனால் பன்றிகளை கொல்வதற்கு பஞ்சாயத்து சார்பில் சந்தோஷுக்கு துப்பாக்கி லைசன்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.
ராதாகிருஷ்ணனுக்கும், சந்தோஷுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வருகிறது. பலமுறை சந்தோஷுக்கு எதிராக ராதாகிருஷ்ணன் போலீசில் புகார் செய்து உள்ளார்.
ராதாகிருஷ்ணன் அருகிலுள்ள கைதப்புரத்தில் புதிதாக ஒரு வீடு கட்டி வருகிறார். நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில் வீட்டை பார்வையிடுவதற்காக சென்று இருந்தார். இந்த சமயத்தில் திடீரென வெடி சத்தம் கேட்டது. பட்டாசு வெடித்திருக்கலாம் என்று அந்த பகுதியினர் முதலில் கருதினர். ஆனால் சிறிது நேரம் கழித்து ராதாகிருஷ்ணனின் மகன் பக்கத்து வீட்டினரிடம் சென்று தன்னுடைய தந்தை துப்பாக்கியால் சுடப்பட்டு கிடப்பதாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது ராதாகிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், ராதாகிருஷ்ணனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ராதாகிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ராதாகிருஷ்ணனை சுட்டுக் கொன்றது சந்தோஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். முன் விரோதம் தான் ராதாகிருஷ்ணனை சந்தோஷ் சுட்டுக் கொல்வதற்கு காரணம் என்று போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே ராதாகிருஷ்ணனை கொலை செய்வதற்கு முன்பாக சந்தோஷ் தன்னுடைய முகநூலில் துப்பாக்கியுடன் குறி வைத்து நிற்பது போன்ற ஒரு போட்டோவை பகிர்ந்தது தெரியவந்தது. இந்த போட்டோவுக்கு கீழ் ‘கொல்வதுதான் என்னுடைய டாஸ்க், கொலை செய்யப் போவது உறுதி’ என்று குறிப்பிட்டு இருந்தார். ராதாகிருஷ்ணனை திட்டமிட்டு தான் சந்தோஷ் கொலை செய்து உள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராதாகிருஷ்ணனை கொல்வதற்கு முன்பு சந்தோஷ் தன் முகநூலில் துப்பாக்கியுடன் குறி வைத்து நிற்பது போன்ற ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். இந்த போட்டோவுக்கு கீழ் ‘கொல்வதுதான் என்னுடைய டாஸ்க், கொலை செய்யப் போவது உறுதி’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
The post துப்பாக்கியால் சுட்டு பாஜ பிரமுகர் கொலை: கேரளாவில் பயங்கரம் appeared first on Dinakaran.