புதுடெல்லி: துறை சார்ந்த அமைச்சகத்திடம் முறையிட மூத்த குடிமக்களுக்கு பிரத்யேக அமைச்சகம் அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. மூத்த வழக்கறிஞர் பிரியதர்ஷினி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘நாட்டில் மூத்த குடிமக்களுக்காக ஒரு பிரத்யேக அமைச்சகம் அல்லது அதுசார்ந்த தனிப்பட்ட துறையை ஒதுக்க வேண்டும். குறிப்பாக அதில் கொள்கைகள், திட்டங்கள், நிதி உதவி, சுகாதாரப் பராமரிப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அளவிற்கு அனைத்தும் கட்டாயம் உருவாக்கப்பட வேண்டும். குறிப்பக கடந்த 2022ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 149 மில்லியன் மக்கள் இருந்தனர். இது நாட்டின் மக்கள் தொகையில் 10.5 சதவீதம் ஆகும்.
இதுகுறித்து முந்தைய புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. மேலும் மூத்த குடிமக்களுக்கு செலவுத் தொகைகள், ஓய்வூதியம், சுகாதாரம், பொருளாதாரம் ஆகியவற்றை பிரத்தேக அமைச்சகம் அல்லது குறிப்பிட்ட துறையால் வகைப்படுத்தப்படாவிட்டால் சமூக கட்டமைப்பில் வரும் காலத்தில் அது மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும். மேலும் மூத்த குடிமக்கள் ஒரு பாதிக்கப்படக்கூடிய வர்க்கம் என்றும், பிரிவு 21 இன் அரசியலமைப்பு கீழ் அது வருகிறது. மேலும் இந்த விவகாரத்தில் துரித நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் இளம் குழந்தைகளை விட, மூத்த குடிமக்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் வாய்ப்பு ஏற்பட்டு விடும். எனவே இவை அனைத்தையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.
மேற்கண்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பி.எஸ்.நரசிம்மா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவில், ‘இந்த விவகாரத்தில் பிரத்யேக அமைச்சகம் அல்லது தனிப்பட்டத் துறை ஆகியவற்றை உருவாக்குவதில் நீதிமன்றம் தலையிடவோ அல்லது அதுகுறித்து வழிநடத்தவோ முடியாது. வேண்டுமெனில் மனுதாரர் இதுசார்ந்த ஒன்றிய துறை அமைச்சகத்திடம் சென்று கோரிக்கை வைக்கவோ அல்லது பிரத்நிதித்துவமோ செய்யலாம். அதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது’ என்று தெரிவித்தனர். இதையடுத்து அதனை ஏற்பதாக தெரிவித்த மனுதாரர் வழக்கை வாபஸ் பெருவதாக தெரிவித்தார். இதையடுத்து அதற்கு ஒப்புதல் அளித்த நீதிபதிகள், இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்தனர்.
The post துறை சார்ந்த அமைச்சகத்திடம் முறையிட மூத்த குடிமக்களுக்கு பிரத்யேக அமைச்சகம்: உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.