சென்னை: அச்சுறுத்தலாக மாறியுள்ள தெருநாய்களை கட்டுப்படுத்த மக்களையும், தொண்டு நிறுவனங்களையும் இணைத்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் எதிர்கொண்டு வரும் பெரும் நெருக்கடிகளில் ஒன்றாக மாறியிருக்கிறது தெருநாய்க்கடியால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படும் சிக்கல். சென்னையில் பல மருத்துவமனைகளுக்கு வெறிநாய் கடித்து சிகிச்சை பெறுவதற்கு தினமும் குறைந்தது 3 பேராவது வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பிற பகுதிகளிலும் இதே நிலைதான். தமிழகத்தில் 2025-ம் ஆண்டு பிறந்த பிறகு கடந்த 3 மாதங்களில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் கூடுதலானவர்கள் நாய்க்கடிக்கு ஆளாகியிருக்கிறார்கள்.