திருமலை: கள்ளக்காதலை எதிர்த்த கணவரை, மனைவி உள்பட 3 பேர் கர் ஏற்றி கொலை செய்துள்ளனர். தெலங்கானா மாநிலம் பல்லேர்லா கிராமத்தை சேர்ந்தவர் சுவாமி (38). டிராக்டர் ஷோரூம் மேலாளர். இவரது மனைவி சுவாதி (33). இவர்களுக்கு 2005ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. சுவாதி, தனது கணவர் மேலாளராக உள்ள அதே ஷோரூமில் வேலை செய்து வருகிறார். தம்பதிக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் சுவாதிக்கும், பல்லேபஹாட்டை சேர்ந்த சாய்குமார் (36) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையறிந்த சுவாமி, மனைவியிடம் கள்ளக்காதலை கைவிடுமாறு அறிவுரை கூறி வந்தார். ஆனால் சுவாதி கள்ளக்காதலனுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இதனால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. தங்கள் கள்ளக்காதலுக்கு தொடர்ந்து இடையூறாக இருந்த கணவர் சுவாமியை தீர்த்துக்கட்ட சுவாதி முடிவு செய்துள்ளார். இதை தனது தம்பி மகேஷ், கள்ளக்காதலன் சாய்குமாரிடம் தெரிவித்தார். அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சுவாமியும், பல்லேரை சேர்ந்த அவரது நண்பர் வீரபாபுவும், பைக்கில் புவனகிரிக்கு சென்றுவிட்டு நள்ளிரவு வீடு திரும்பினர்.
கேட்டபள்ளி அருகே வந்தபோது இவர்களது பைக் மீது, கார் மோதியது. இதில் சுவாமியும், வீரபாபுவும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இதில் சுவாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீரபாபுவை மீட்டு ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக சுவாமி குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து குடும்பத்தினரின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்து விசாரித்தனர். அதில் சுவாதி, தனது தம்பி மகேஷ் மற்றும் சாய்குமாருடன் சேர்ந்து, தனது கணவர் சுவாமியை கார் ஏற்றிக்கொன்றது தெரியவந்தது.
இதற்காக இவர்கள் ஒரு காரை வாடகைக்கு எடுத்துள்ளனர். அவர்களது திட்டம் முடிந்ததும் காரை அங்குள்ள ஒரு மாம்பழ தோட்டத்தில் விட்டுவிட்டு 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதற்கிடையில் சுவாமி, சாலை விபத்தில் இறந்ததாக கூறி அனைவரின் முன்பு சுவாதி கதறி அழுது நம்ப வைத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சுவாதி, மகேஷ், சாய்குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலை எதிர்த்த கணவரை மனைவியே கார் ஏற்றி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post தெலங்கானாவில் கள்ளக்காதலை எதிர்த்ததால் ஆத்திரம்; கார் ஏற்றி கணவரை கொன்று விட்டு நாடகமாடிய கில்லாடி மனைவி: கள்ளக்காதலன், தம்பியுடன் கைது appeared first on Dinakaran.