ஐதராபாத்: தெலங்கானாவில் ‘டிவி ரிமோட்டை’ யார் வைத்திருப்பது என்பது தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் பெண் சாப்ட்வேர் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் இருக்கும் சாப்ட்வேர் கம்பெனியில் இன்ஜினியர்களாக தம்பதிகள் பணியாற்றி வந்தனர். இவர்கள் ராய்துர்கம் பகுதியில் வசித்து வந்தனர். இருவருக்குள்ளும் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் இருந்தன. இந்நிலையில் நேற்று இருவருக்குள்ளும் ஏற்பட்ட சண்டையில் அந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த ராய்துர்கம் போலீசார், அந்தப் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘தற்கொலை செய்து கொண்ட பெண்ணும், அவரது கணவரும் ஒரே சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து தான் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 6 மாதத்திற்கு முன்புதான் இருவருக்கும் இரு தரப்பு பெற்றோர் சம்மதத்துடன் கோவாவில் திருமணம் நடந்தது. முதற்கட்ட விசாரணையில், ஞாயிற்றுக்கிழமை இரவு ‘டிவி ரிமோட்டை’ யார் வைத்திருப்பது என்பது தொடர்பாக தம்பதியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து கணவர் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
அடுத்த நாள் கணவர் வீடு திரும்பி வந்தபோது, அவரது மனைவி அவரது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். ஆனால் கூடுதல் வரதட்சணை கேட்டு அந்தப் பெண்ணின் கணவர் துன்புறுத்தல் கொடுத்ததால், தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் கூறுகின்றனர். அந்தப் பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின்படி, கணவர் உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகிறோம்’ என்றனர்.
The post தெலங்கானாவில் ‘டிவி ரிமோட்’ சண்டையில் பெண் சாப்ட்வேர் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.