ஐதராபாத்: தெலங்கானா அதிரவைத்த கவுரவ கொலை வழக்கில் கூலிப்படை கொலையாளிக்கு தூக்கு தண்டனையும், மேலும் 6 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவ்வழக்கு 250 முறை விசாரணைக்கு வந்தநிலையில் தற்போது தீர்ப்பு வெளியாகி உள்ளது. தெலங்கானா மாநிலம், மிரியாலகுடாவைச் சேர்ந்த வியாபாரி மாருதி ராவின் மகள் அம்ருதவர்தினி என்பவர், தனது இளம் வயது நண்பரான பிரணய் பெருமல்லா என்பவரைக் காதலித்தார்.
இதற்குப் பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டு இருவரும் சாதி மறுப்புத் திருமணம் செய்தனர். இளம் தம்பதி தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கர்ப்பமாக இருந்த அம்ருதவர்தினியை, அவரது காதல் கணவர் மருத்துவப் பரிசோதனைக்காக இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார். அப்போது, அவரைப் பின்தொடர்ந்து வந்த கும்பல், அரிவாளால் வெட்டி அவரைக் கொன்றது. தெலங்கானாவை உலுக்கிய கவுரவக் கொலை வழக்கில், பெண்ணின் தந்தை கூலிப்படைக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்து கொலை செய்யத் தூண்டியது அம்பலமானது. இதையடுத்து, பெண்ணின் தந்தை மாருதி ராவ் உட்பட 8 பேரைக் கைது செய்து போலீசார் சிறையில் அடைந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை மிரியாலகுடாவில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே, ஜாமீனில் வெளிவந்த மாருதி ராவ் தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், முதன்மை குற்றவாளி மாருதி ராவ் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இரண்டாவது குற்றவாளியான கூலிப்படை தலைவன் சுபாஷ் குமார் என்பவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் உட்பட எஞ்சிய 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சாதி மறுப்பு செய்த இளைஞரை வெட்டிக் கொன்ற வழக்கில், நீதிமன்றம் கடும் தண்டனை வழங்கப்பட்டதற்கு உறவினர்கள் உட்படப் பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து பேசிய பிரணயின் தந்தை பாலசாமி கூறுகையில், ‘நீதிமன்றம் அவர்களுக்கு தண்டனை அளித்தும் நாங்கள் மகிழ்ச்சியாக இல்லை; மகனை இழந்து தொடர்ந்து துக்கத்தில் இருக்கிறோம்; இதுபோன்ற ஆணவக் கொலைகள் நிறுத்தப்பட வேண்டும்’ என்று தெரிவித்தார். தெலங்கானா மட்டுமின்றி நாட்டையே உலுக்கிய இந்த கொலை வழக்கானது, நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடாவில் உள்ள எஸ்சி/எஸ்டி சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தியது.
இந்த கவுரவ கொலை வழக்கில் நேற்று இறுதித் தீர்ப்பு வரும் வரை 250க்கும் மேற்பட்ட வாய்தாக்களில் விசாரணைகள் நடைபெற்றன. போலீசார் தங்களது விசாரணையை முடித்து, கடந்த 2019ம் ஆண்டு ஜூனில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதன்பின் அதே ஆண்டு ஆகஸ்டில் சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் வாதங்கள் தொடங்கின. இந்த வழக்கில் விசாரணைகளை நடத்திய நீதிமன்றம், 78 சாட்சிகள், கொலையில் பயன்படுத்தப்பட்ட கத்தி உட்பட 30 பொருள்கள் மற்றும் 293 ஆவணங்களை ஆய்வு செய்து தற்போது தீர்ப்பை வழங்கியுள்ளது.
The post தெலங்கானாவை அதிரவைத்த கவுரவ கொலை வழக்கு; கூலிப்படை கொலையாளிக்கு தூக்கு; 6 பேருக்கு ஆயுள்: 250 முறை விசாரணைக்கு வந்த வழக்கில் பரபரப்பு தீர்ப்பு appeared first on Dinakaran.