கேரள மாநிலம் கொச்சியின் தேசிய பெடரேஷன் சீனியர் தடகள போட்டி நடைபெற்று வருகிறது. இதன் இறுதி நாளான நேற்று ஆடவருக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் ஒடிசாவை சேர்ந்த அனிமேஷ் குஜூர் பந்தய தூரத்தை 20.40 விநாடிகளில் கடந்து தேசிய சாதனையுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். இதற்கு முன்னர் 2022-ம் ஆண்டு போடடியில் அம்லான் போர்கோகெய்ன் பந்தய தூரத்தை 20.52 விநாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது. இதை தற்போது முறியடித்த புதிய சாதனையை படைத்துள்ளார் அனிமேஷ் குஜூர்.
ஆசிய அளவில் அனிமேஷ் குஜூரின் சாதனை முதலிடத்திலும் உலக அளவில் 35-வது இடத்திலும் உள்ளது. எனினும் அனிமேஷ் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார். உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு பந்தய தூரத்தை 20.16 விநாடிகளில் கடக்க வேண்டும். இருப்பினும், இந்திய தடகள கூட்டமைப்பு நிர்ணயித்த ஆசிய சாம்பியன்ஷிப் தகுதி நேரத்தை (20.53 விநாடி) எட்டினார்.