நம்மைச் சுற்றி உள்ள அனைத்தும் அறிவியல் மயம்தான். ஆயிரமோ லட்சமோ எண்ணற்ற கேள்விகளுக்கு அறிவியல்பூர்வமாகப் பதில்களைத் தேடிச் சென்றதால்தான் வரலாற்றில் மனிதனால் ஆதிகாலத்தில் இருந்து பரிணமித்து வரமுடிந்தது. அறிவியல் என்பதை ஒரு பாடமாக மட்டும் சுருக்கிவிட முடியாது. பள்ளி, கல்லூரிப் படிப்புகளைத் தாண்டி வாழ்வில் பல சூழல்களில் அறிவியலோடு பயணப்பட வேண்டி இருக்கும் என்பதால், அறிவியல் சிந்தனையை ஒருவர் கண்டிப்பாக வளர்த்துக்கொள்ள வேண்டும்.
நன்மையா, தீமையா? – அறிவியலும் தொழில்நுட்பமும் ஒன்றோடு மற்றொன்று தொடர்புடையவை. அறிவியல்ரீதியான ஆராய்ச்சிகளும் கண்டறிதல்களும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இப்படி அறிவியல் தொழில்நுட்பம் மேம்படும் போது மனிதர்களின் வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் ஏற்படும். சக்கரம், மின்சாரம், தொலைக்காட்சிப் பெட்டி, கணினி, திறன்பேசி எனப் பல கண்டறிதல்கள் அறிவியல் – தொழில் நுட்பத்தின் இணைப்பால் நிகழ்ந்தவை.