புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நோக்கி இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் பிரம்மாண்ட பேரணி நடத்துகின்றனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்த பேரணி நடைபெறுகிறது. இதில், 25 கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் பங்கேற்கின்றனர். காலை 11.30 மணியளவில் இந்தப் பேரணி நடைபெறவிருக்கிறது.
இதில், காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, இடதுசாரிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் பிரிவு), சிவசேனா (யுபிடி) மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் கலந்து கொள்கின்றனர்.