கொல்கத்தா: தேர்தல் துறையை தனியாகப் பிரிக்க உத்தரவிட்ட இந்திய தேர்தல் ஆணையத்தின் முடிவு, மாநில தேர்தல் அதிகாரிக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கும் வகையில் இருப்பதாக ஆளுங்கட்சி தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. மேற்குவங்க மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வருடத்திற்கும் குறைவான காலமே உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு முக்கிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், மாநில தலைமை தேர்தல் அதிகாரி தன்னிச்சையாகவும், சுதந்திரமாகவும் செயல்படுவதை உறுதிசெய்ய, பிரத்யேக பட்ஜெட்டுடன் தனித் தேர்தல் துறையை உருவாக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. தற்போது, தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம், மாநில உள்துறை மற்றும் மலை விவகாரங்கள் துறையின் கீழ் ஒரு துணைப் பிரிவாக செயல்பட்டு வருகிறது. இதனால், நிதி மற்றும் நிர்வாக சுதந்திரம் இல்லாமல் இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. மேலும், ‘மாநில அரசின் வேறு எந்தத் துறையுடனும் தொடர்பில்லாத, தனித் தேர்தல் துறையை உருவாக்க வேண்டும்.
அதற்கு என்று தனி பட்ஜெட் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்போது தான் தேர்தல்களை திறம்பட மற்றும் பாரபட்சமின்றி நடத்துவதற்குத் தேவையான முழு நிதி மற்றும் நிர்வாக சுயாட்சி தலைமை தேர்தல் அதிகாரிக்கு கிடைக்கும். தலைமை தேர்தல் அதிகாரிக்கு மற்ற துறை செயலாளர்களுக்கு இணையான நிதி அதிகாரங்களை வழங்கவும், நிதி ஆலோசகர் ஒருவரை நியமிக்கவும், காலியாக உள்ள நான்கு உயர் அதிகாரி பணியிடங்களை உடனடியாக நிரப்பவும் வேண்டும்’ என்று அந்த கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை, மேற்கு வங்கத்தில் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய் பிரகாஷ் மஜும்தார் கூறுகையில், ‘வாக்காளர் பட்டியலை கையகப்படுத்தி, வருகிற சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு சாதகமாக செயல்பட இந்திய தேர்தல் ஆணையம் விரும்புகிறது. அவர்கள் பாரபட்சமாக நடந்துகொள்கிறார்கள்’ என குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக மூத்த தலைவர் ராகுல் சின்ஹா, ‘தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை மூலம் சட்டவிரோத வங்கதேச வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் மாநில அரசைச் சாராமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு மிகவும் முக்கியமானது’ என்று வரவேற்றுள்ளார். தேர்தல் துறையை தனியாகப் பிரித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் மாநில அரசுக்கு அறிவுறுத்தி உள்ளதால், இந்த நடவடிக்கையானது பாஜகவுக்கு சாதகமா? என்பது குறித்த புதிய அரசியல் சர்ச்சை கிளம்பி உள்ளது.
The post தேர்தல் துறையை தனியாகப் பிரிக்க உத்தரவு; மாநில தேர்தல் அதிகாரிக்கு தன்னாட்சி அதிகாரம்?: மேற்குவங்கத்தில் கிளம்பியது புது அரசியல் சர்ச்சை appeared first on Dinakaran.