திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள 108 திவ்யதேசங்களில் ஒன்றான ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் தை பிரம்மோற்சவம் கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் உற்சவர் ஸ்ரீ வீரராகவர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகிறார். இந்நிலையில், 7ம் நாளான நேற்று தை பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக கோயிலின் 60 அடி உயரமும், 21 அடி அகலமும் கொண்ட திருத்தேர் பவனி நடைபெற்றது. அதன்படி அதிகாலை 5 மணியளவில் சுவாமி தேருக்கு எழுந்தருளுதலும், 7 மணியளவில் தேர் திருவிழாவும் நடைபெற்றது. திருத்தேரில் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் தேரடியில் இருந்து புறப்பட்டார். 4 மாட வீதிகள் வழியாக சென்று தேர் மீண்டும் தேரடியை வந்தடைந்தது.
இதனைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு திருமஞ்ஜனமும், இரவு 9 மணிக்கு தேரிலிருந்து கோயிலுக்கு எழுந்தருதளும் நடைபெற்றது. 8ம் நாளான இன்று மாலை திருப்பாதம்சாடி திருமஞ்ஜனமும், இரவு குதிரை வாகன புறப்பாடும், 9ம் நாளான நாளை காலை 5 மணிக்கு ஆள்மேல் பல்லக்கு புறப்பாடும், 10 மணிக்கு திருமஞ்ஜனமும், 11 மணிக்கு தீர்த்தவாரியும், இரவு 7 மணிக்கு விஜயகோடி விமான புறப்பாடும், 8.30 மணிக்கு திருமொழி சாற்றுமுறை ரத்னாங்கி சேவையும் நடைபெறுகிறது. விழாவின் கடைசி நாளான 2ம் தேதி காலை 9.30 மணிக்கு திருமஞ்ஜனமும், இரவு 7.30 மணிக்கு வெட்டிவேர் சப்பரமும் நடைபெறுகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த தை பிரம்மோற்சவத்திற்கான ஏற்பாடுகளை கோயில் கவுரவ ஏஜென்ட் ரங்கநாதன், மக்கள் தொடர்பு அலுவலர் சம்பத் மற்றும் கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.
The post தை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் தேர் திருவிழா appeared first on Dinakaran.