ஒடிசா: தொகுதி மறுவரையறை தொடர்பாக ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்றுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2026ம் ஆண்டுக்குப் பின் மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதுகுறித்து மேற்கொள்ளவேண்டிய அணுகுமுறை குறித்தும் முடிவுகள் மேற்கொள்ள கடந்த 5ம் தேதி சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார்.
அக்கூட்டத்தில் இப்பிரச்சனை தொடர்பாக முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, இப்பிரச்னையால் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களிலுள்ள கட்சிகளின் முக்கியப் பிரதிநிதிகளைக் கொண்டு “கூட்டு நடவடிக்கைக் குழு” அமைத்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களையும், அவை சார்ந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், மக்கள் மத்தியில் இப்பிரச்சனை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், அதற்கான முறையான அழைப்பை மேற்படி கட்சித் தலைவர்களுக்கு அனுப்பி வைத்திடவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில், முதல்வர் மு.க. ஸ்டாலின், 7 மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள், அம்மாநிலங்களில் உள்ள பல்வேறு முக்கிய கட்சிகளின் தலைவர்களுக்கும் கடிதம் எழுதினார். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ், ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் சித்தராமையா, கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார், பஞ்சாப் முதல்வர் பகவத்மான், ஆந்திரப்பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஆந்திரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இக்கடிதம் மேற்குறிப்பிட்ட 7 மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு முக்கியக் கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டது. இந்த நிலையில்,இன்று தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக ஆதரவு திரட்டுவதற்காக நவீன் பட்நாயக்குடன் திமுக எம்.பி. தயாநிதி மாறன், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் சந்தித்தனர். தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் 7 மாநிலங்களின் முதலமைச்சர்கள், அம்மாநிலங்களின் கட்சிகளின் ஆதரவை திரட்ட போராட்டம் நடத்த முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில் சந்தித்தனர். தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் ஏற்றார். தமிழ்நாட்டில் அனைத்துக்கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில் 7 மாநில கட்சிகளின் ஆதரவை திரட்ட முயற்சி செய்து வருகின்றனர்.
The post தொகுதி மறுவரையறை; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்றார் ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்..!! appeared first on Dinakaran.