புதுடெல்லி: பிரதமர் மோடி நேற்று பல்வேறு துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். டெல்லியில் பிரதமர் அலுவலக மூத்த அதிகாரிகள் பாதுகாப்பு, உள்துறை, வெளியுறவு, தகவல் மற்றும் ஒளிபரப்பு, மின்சாரம், சுகாதாரம் மற்றும் தொலைதொடர்பு உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களின் செயலாளர்களை உள்ளடக்கிய உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்களின் தேசிய தயார் நிலை மற்றும் அமைச்சகங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டது.
கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தொடர்ந்து செயல்படுதல் மற்றும் நிறுவன ரீதியான மீள்தன்மையை நிலைநிறுத்துவதற்கு அமைச்சகங்கள் மற்றும் ஏஜென்சிகளிடையே தடையற்ற ஒருங்கிணைப்பு அவசியமாகும். நாடு ஒரு முக்கியமான காலகட்டத்தில் பயணித்து வருவதால் அனைவரும் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். செயலாளர்கள், ஏஜென்சிகளுடன் இணைந்து நெருங்கிய ஒத்துழைப்பை தர வேண்டும் மற்றும் ஒருவருக்கு ஒருவர் தெளிவான தகவல் தொடர்பு அவசியமாகும். தேசிய பாதுகாப்பு செயல்பாட்டு தயார் நிலை மற்றும் குடிமக்கள் பாதுகாப்பிற்கான அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் பொதுமக்களின் பாதுகாப்பு வழிமுறைகளை வலுப்படுத்த வேண்டும். தவறான தகவல்கள் மற்றும் போலி செய்திகளை எதிர்ப்பதற்கான முயற்சிகள், முக்கியமான உள்கட்டமைப்புக்களின் பாதுகாப்புக்கள் உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்டவை குறித்தும் பிரதமர் மோடி ஆலோசித்தார். தற்போதைய சூழ்நிலையை சமாளிப்பதற்கு அமைச்சகங்களின் திட்டமிடல் மற்றும் தயார் நிலை குறித்தும் பிரதமர் மதிப்பாய்வு செய்தார்.
The post தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும்: பல்வேறு அமைச்சக செயலாளர்களிடம் பிரதமர் வலியுறுத்தல் appeared first on Dinakaran.