புதுடெல்லி: சட்டீஸ்கர் மாநிலம் நாராயண்பூர்-பிஜாப்பூர் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் நக்சலைட்டுகளின் தலைவர் பசவராஜூ உட்பட 27 நக்சல்கள் நேற்றுமுன்தினம் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) ஆகியவை கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில்,மார்க்சிஸ்ட் கட்சியும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு நக்சலைட்டுகள் பலமுறை வேண்டுகோள் விடுத்தனர்.
ஒன்றிய அரசும், சட்டீஸ்கர் அரசும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வை காண விரும்பவில்லை. அதற்கு மாறாக கொலை மற்றும் அழிப்பு என்ற மனிதாபிமானமற்ற கொள்கையை அரசு பின்பற்றுகிறது.ந க்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் காலக்கெடுவை குறிப்பிட்டு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடர்ந்து பேசி வருகிறார். நக்சலைட்டுகளுடன் பேச்சுவார்த்தை தேவையில்லை என்ற சட்டீஸ்கர் முதல்வரின் பேச்சு மனித உயிர்களை பறிப்பதை கொண்டாடும் பாசிச மனநிலையை காட்டுகிறது. நக்சலைட்டுகளின் அரசியலை நாங்கள் எதிர்த்தாலும் பேச்சுவார்த்தைக்கான கோரிக்கையை ஏற்று துணை ராணுவத்தின் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
* சந்திரபாபு நாயுடுவை கொல்ல முயன்றவர்
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்திற்காக அரசு சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்பட்டு வருவது வழக்கம். அதன்படி கடந்த 20 ஆண்டுகளுக்குமுன் அப்போதைய ஒருங்கிணைந்த ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு, திருப்பதி கோயிலுக்கு வந்தார். அப்போது திருப்பதி மலையடிவாரமான அலிபிரியில் நக்சலைட்டுகள் கண்ணிவெடி குண்டுகளை வைத்து வெடிக்க செய்தனர். இந்த தாக்குதலில் குண்டு துளைக்காத காரில் பயணித்த சந்திரபாபு நாயுடு லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதையடுத்து காவல்துறை நடத்திய விசாரணையில் சந்திரபாபு நாயுடுவை கொல்ல நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் நக்சல் இயக்க முக்கிய குற்றவாளியான, கொரில்லா போராட்டத்தை தொடங்கிய நம்பலா கேசவராவ் என்கிற பசவராஜு சட்டீஸ்கரில் நேற்று முன்தினம் நடந்த என்கவுன்டரில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post நக்சலைட்டுகளுடன் பேச்சுவார்த்தைக்கான கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்தது: மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.