மும்பை: வீடு புகுந்து நடிகர் சைப் அலிகானை கத்தியால் குத்தி ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய திருடனை 30க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை அதிகாலை, மும்பை பாந்த்ரா பகுதியில் நடிகர் சைப் அலிகான் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்த திருடன் ஒருவன் அவரது மகனின் அறைக்குள் சென்று திருட முயற்சித்துள்ளான். அப்போது செவிலியர் பார்த்து கூச்சலிடவும் அங்கு வந்த சைப் அலிகான் திருடனை பிடிக்க முயற்சித்தார்.
அப்போது திருடன் சைப் அலிகானை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினான். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. படுகாயங்களுடன் உயிர் தப்பிய சைப் அலிகான், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கிய போலீசார், அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து திருடனை அடையாளம் கண்டனர். அதில் திருடனின் முகம் தெளிவாக பதிவாகி உள்ளது.
தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் சைப் அலிகான் வீட்டில் தடயங்களை சேகரித்த போலீசார், 30 தனிப்படைகளை அமைத்து திருடனை வலைவீசித் தேடி வருகின்றனர். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் பிடித்துள்ளனர். வாரிஸ் அலி சல்மானி என்ற அந்த நபர் தச்சராக பணிபுரிந்து வருவதும், 2 நாட்களுக்கு அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்துள்ளார். அவரிடம் விசாரணை நடக்கிறது.
* 3 நாட்களில் டிஸ்சார்ஜ்
லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் சைப் அலிகான் உடல்நலம் தேறி வருவதாகவும், இன்னும் 2 அல்லது 3 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
The post நடிகர் சைப் அலிகானுக்கு கத்திக்குத்து குற்றவாளியை தேடும் 30 தனிப்படைகள் appeared first on Dinakaran.