சென்னை: நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி விஜய்வசந்த் பேசுகையில், ஏற்கெனவே வங்கிகளில் பெற்ற நகைக்கடன் தொகைக்கு, ஆண்டுதோறும் வட்டி மட்டும் செலுத்தி மறுஅடகு வைக்கலாம் என்றிருந்தது. தற்போது அந்நகைக்கு அசலுடன் வட்டியையும் சேர்த்து செலுத்திய பிறகு, மறுநாள் அந்நகையை மீண்டும் அடகு வைத்து கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி புதிய விதியை ஏற்படுத்தி உள்ளது. இது, ஏழை மக்களின் நலனுக்கு எதிரானது. இதன்மூலம் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் ஏழை மக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தங்களிடம் கல்வி, மருத்துவம் போன்ற அவசர தேவைகளுக்கு போதிய பணம் இல்லாததால்தான், வங்கிகளில் ஏழை மக்கள் நகைகளை அடகு வைக்கின்றனர்.
அதற்கு உண்டான காலக்கெடு முடியும்போது, அந்நகைக்கு 12 மாத அசல் மற்றும் வட்டி தொகையை செலுத்த வேண்டும் என்ற நிலை வரும். இதனால் அவர்கள் அந்நகைக்கு செலுத்திய தொகை போக, மீதமுள்ள கடன்தொகைக்கு மீண்டும் நகைகளை அடகு வைக்கின்றனர். தற்போதைய புதிய விதியால், அவர்கள் தனியார் நிறுவனங்களில் அதிக வட்டிக்கு பணத்தை கடனாக வாங்கி, தங்களின் அடகு நகைகளை இழக்க நேரிடும். எனவே, இப்புதிய விதியை ரிசர்வ் வங்கி திரும்பப் பெறவேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன். இதில் பொதுமக்கள் நலன் கருதி மத்திய அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று விஜய்வசந்த் எம்பி தெரிவித்தார்.
The post நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நகை கடன் புதிய விதி ஏழை நலனுக்கு எதிரானது: விஜய்வசந்த் எம்பி பேச்சு appeared first on Dinakaran.