திருமலை: நாடு முழுவதும் நெட்வொர்க் அமைத்து பச்சிளங்குழந்தைகளை கடத்தி விற்பனை செய்து வந்த 25 பேர் கொண்ட கும்பல் பிடிபட்டது. மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் குழந்தைகள் கடத்தப்பட்டு அவற்றை தெலங்கானா மாநிலத்தில் விற்பதாக தெலங்கானா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் ஒரு சிலர் பிடிபட்டனர். இந்நிலையில் பிடிபட்ட கும்பலிடம் நடத்திய தீவிர விசாரணையில் மகாராஷ்டிரா, உ.பி., சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இருந்து குழந்தைகளை வாங்கிவந்து தெலங்கானாவில் மையமாக வைத்து மேற்குவங்கம், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு விற்று வந்ததும், இதன்மூலம் பல லட்சம் பணபரிவர்த்தனை நடந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக 25 பேர் கொண்ட கும்பலை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, பிறந்து ஒரு மாதம் ஆன 6 பெண் குழந்தைகள், 6 மாதம் கொண்ட 4 ஆண் குழந்தைகள் என மொத்தம் 10 குழந்தைகளை மீட்டனர்.
இதுகுறித்து தெலங்கானா போலீஸ் கமிஷனர் சுதீர்பாபு நேற்றிரவு அளித்த பேட்டி: தெலங்கானாவில் குழந்தை கடத்தல் மற்றும் விற்பனைக்கென மிகப்பெரிய நெட்வொர்க் அமைத்து செயல்பட்டு வந்துள்ளனர். குறிப்பாக குழந்தைகளை கடத்தி விற்பனை செய்யும் கும்பல் பல லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளனர். தவறான உறவு முறையில் பிறந்த குழந்தைகள் மற்றும் மருத்துவமனைகளில் இருந்து திருடி வந்த குழந்தைகளை இடைத்தரகர் கும்பல் ரூ.30 ஆயிரம் வரை வாங்கி அதனை பல லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளது. குறிப்பாக மருத்துவமனையில் இருந்து திருடப்படும் அல்லது தவறான உறவுமுறையில் பிறந்த குழந்தையை விலைக்கு வாங்கும் இடைத்தரகர், ஆண் குழந்தை என்றால் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையும், பெண் குழந்தை என்றால் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையும் தெலங்கானா நெட்வொர்க் கும்பலிடம் விற்றுள்ளனர். அந்த குழந்தையை நெட்வொர்க் கும்பல் விலைக்கு வாங்கி தமிழ்நாட்டில் சென்னை, கர்நாடகாவில் பெங்களூரு மற்றும் ஆந்திராவில் உள்ள நகரங்களில் குழந்தை இல்லா தம்பதிகளுக்கு விற்பனை செய்துள்ளது. குறிப்பாக ஆண் குழந்தையை ரூ.6 லட்சம் வரையும், பெண் குழந்தையை ரூ.4 லட்சம் வரையும் என விலை நிர்ணயித்து விற்று வந்துள்ளனர்.
இதுதொடர்பாக ஆரம்ப சுகாதார நிலைய ஆஷா பணியாளர் அமுல்யா (29), ஷேக்இஸ்மாயில், கோலா கிருஷ்ணவேணி, இடைத்தரகர்கள் பீம்ராவ் வாஸ்னிக் (40), கார்த்திக் (43), சஜ்ஜன் அகர்வால் (41), பனாலா மங்கய்யா (42), ராமராம் அசோக் (30) உட்பட மொத்தம் 25 பேரை கைது செய்துள்ளோம். இவர்களிடம் இருந்து முதற்கட்டமாக 10 குழந்தைகளை மீட்டுள்ளோம். அவர்களிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்துள்ளோம். மேலும் 11 குழந்தைகளை அவர்கள் கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் குண்டூர் பகுதிகளில் விற்றுள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். எனவே விற்கப்பட்ட குழந்தைகளை மீட்க தீவிரமாக விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post நாடு முழுவதும் நெட்வொர்க் அமைத்து பச்சிளங்குழந்தைகளை கடத்திய 25 பேர் கொண்ட கும்பல் சிக்கியது: 10 குழந்தைகள் மீட்பு appeared first on Dinakaran.