புதுடெல்லி: கடந்த 2022-2024ம் ஆண்டுக்கு இடையில் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் 51 மாணவர்கள் ராகிங் கொடுமையால் பலியாகி உள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலான மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் படிப்பவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
கல்வியில் வன்முறைக்கு எதிரான சங்கம் என்ற அமைப்பு ‘இந்தியாவில் ராகிங் நிலை, 2022-24’ என்ற ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ‘கல்லூரிகளில் மாணவர்களை பகடிவதை எனப்படும் ‘ராகிங்’ கொடுமை நடப்பது வாடிக்கையாக உள்ளது. பெரும்பாலான சம்பவங்கள் மருத்துவக் கல்லூரிகளில் நடந்துள்ளது. நாடு முழுவதும் 2022ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டுக்கு இடையில் மட்டும் மொத்தமுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் 51 பேர் ராகிங் கொடுமையால் பலியாகி உள்ளனர். தேசிய ராகிங் எதிர்ப்பு உதவி எண்ணுக்கு 1,946 கல்லூரிகளில் இருந்து 3,156 புகார்கள் வந்தன. இதில், 38.6 சதவீதம் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து வந்துள்ளது.
இந்த புகார்கள் ஹெல்ப்லைன் மூலம் மட்டுமே பதிவு செய்யப்பட்டவை; பாதிக்கப்பட்டவர்களால் கல்லூரிகள் மற்றும் காவல்துறைக்கு நேரடியாகப் பதிவு செய்யப்பட்ட புகார்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம். கடந்த 2022ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டுக்கு இடையில் ராஜஸ்தானின் கோட்டாவில் மட்டும் பல்வேறு பயிற்சி மையங்களில் படித்த மாணவர்களில் 57 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். கல்லூரிகள் ராகிங் எதிர்ப்புப் படைகளை அமைக்க வேண்டும். புதிய கல்லூரிக்கு செல்லும் மாணவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும். பல சந்தர்ப்பங்களில், ராகிங் மிகவும் கடுமையானதாக இருப்பதால், மாணவர்கள் பலர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். 2022-2024ம் ஆண்டில் பதிவான மொத்த புகார்களில் சாதாரண புகார்கள் 38.6 சதவீதமும், கடுமையான புகார்களில் 35.4 சதவீதமும், ராகிங் தொடர்பான இறப்புகளில் 45.1 சதவீதமும் மருத்துவக் கல்லூரிகள்தான் நடந்துள்ளது.
மருத்துவக் கல்லூரிகளில்தான் மூத்த மாணவர்களால் ஜூனியர் மாணவர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுவது மிகவும் அதிகமாக உள்ளது. மாணவர்கள் கல்வி அழுத்தத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில், ராகிங் பிரச்னையால் அவர்கள் இன்னும் கடுமையான மன அழுத்தத்தையும் எதிர்கொள்கின்றனர். இதனால் அவர்களின் மன ஆரோக்கியம் பாதிக்கிறது. ராகிங் செய்வதைத் தடுக்க அரசாங்கமும், கல்வி நிறுவனங்களும் பல விதிமுறைகளை அறிமுகப்படுத்தியிருந்தாலும், ராகிங் வழக்குகள் இன்னும் தொடர்ந்து பதிவாகின்றன.
இதுபோன்ற வழக்குகளில் உடனடி நடவடிக்கை எடுப்பதே தேசிய ராகிங் எதிர்ப்பு உதவி எண்ணின் நோக்கமாகும். இருப்பினும், பல சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்ட மாணவர்கள் அழுத்தம் காரணமாக வெளியே பேச பயப்படுகின்றனர். கல்வி நிறுவனங்களில் கடுமையான ராகிங் சம்பவங்கள் நடந்தாலும், மிகக் குறைவான மக்களே புகார் அளிக்க முன்வருகிறார்கள். அவர்கள் பயத்தின் காரணமாக அமைதியாக இருக்கின்றனர்.
ராகிங் செய்வதைத் தடுக்க விடுதிகளில் சிசிடிவி கண்காணிப்பு மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ராகிங் எதிர்ப்புக் குழுக்களும், பெற்றோர்களும் அதைக் கண்காணிக்க வேண்டும். யுஜிசி மற்றும் என்எம்சி விதிமுறைகளின்படி, புதிய மாணவர்கள் சிறப்பு விடுதிகளில் தங்க வைக்கப்பட வேண்டும். கடுமையான ராகிங் வழக்குகளுக்கு நிறுவனங்கள் 24 மணி நேரத்திற்குள் காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும்.
யாராவது ராகிங்-யால் பாதிக்கப்பட்டால், அவர்கள் உடனடியாக தேசிய ராகிங் எதிர்ப்பு உதவி எண்ணில் புகார் அளிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பணிக்குழுவை அறிவித்தது சுப்ரீம் கோர்ட்
கடந்த 2018 முதல் 2023ம் ஆண்டு வரை உயர்கல்வி நிறுவனங்களில் 98 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக மத்திய கல்வி இணை அமைச்சர் 2023ம் ஆண்டு ராஜ்யசபாவில் தெரிவித்தார். இந்தக் காலகட்டத்தில், ஐஐடிகளில் 39 மாணவர்களும், என்ஐடிகளில் 25 மாணவர்களும், மத்திய பல்கலைக்கழகங்களில் 25 மாணவர்களும், ஐஐஎம்களில் நான்கு மாணவர்களும், ஐஐஎஸ்இஆர்களில் மூன்று மாணவர்களும், ஐஐஐடிகளில் இரண்டு மாணவர்களும் தற்கொலை செய்து கொண்டனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐஐடி-யில் (டெல்லி) படிக்கும் போது தற்கொலை செய்து கொண்ட இரண்டு மாணவர்கள் தொடர்பான வழக்கில், எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு டெல்லி காவல் துறைக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும் நீதிபதிகள் கூறுகையில், ‘உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் கவலையளிக்கின்றன. மாணவர் தற்கொலையைத் தடுப்பதற்கான அமைப்புகளை வலுப்படுத்தப்பட வேண்டும். அதனால் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ரவீந்திர பட் தலைமையில் தேசிய பணிக்குழுவை அமைக்கிறோம். மேலும் உயர்கல்வி, சமூக நீதி, அதிகாரமளித்தல், சட்டம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகங்களின் செயலாளர்கள், பணிக்குழுவின் அலுவல் ரீதியான உறுப்பினர்களாக இருப்பார்கள்.
இந்த குழுவின் பணியானது, தற்கொலைகளுக்கு வழிவகுக்கும் காரணங்களை அடையாளம் காண்பது மற்றும் தற்கொலை தடுப்பு தொடர்பான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை கடுமையாக செயல்படுத்துவது குறித்து விரிவான அறிக்கையைத் தயாரிக்கும். இந்த அறிக்கையை இறுதி செய்வதற்காக, நாட்டின் எந்தவொரு உயர்கல்வி நிறுவனத்திலும் பணிக்குழு திடீர் ஆய்வுகளை மேற்கொள்ளும். தற்போதுள்ள விதிகளுக்கு மேலதிகமாக கூடுதல் பரிந்துரைகளை வழங்கவும் இந்த பணிக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பணிக்குழுவின் இடைக்கால அறிக்கையை நான்கு மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 8 மாதங்களுக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
The post நாடு முழுவதும் 2022 முதல் 2024 ஆண்டு வரை ‘ராகிங்’ கொடுமையால் 51 மாணவர்கள் பலி: மருத்துவக் கல்லூரிகளில் தான் பாதிப்பு அதிகம் appeared first on Dinakaran.