டெல்லி: நாட்டின் 26வது தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் பதவியேற்றுக் கொண்டார். தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து, புதிய தலைமை தேர்தல் ஆணையரை முடிவு செய்வதற்கான தேர்வுக்குழு கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் பங்கேற்றனர். இதில், கடந்த ஆண்டு தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட ஞானேஷ் குமார் புதிய தலைமை தேர்தல் ஆணையராக தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால், தேர்தல் ஆணையர்களை தேர்நதெடுக்கும் தேர்வுக்குழு மற்றும் அதன் செயல்முறை குறித்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளதால் 48 மணி நேரம் காத்திருந்து முடிவெடுக்க வேண்டுமென கூட்டத்தில் ராகுல் காந்தி வலியுறுத்தியது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்படுவதாக ஜனாதிபதி முர்மு முறைப்படி அறிவித்தார். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட உள்ள நிலையில், அவசர அவசரமாக நள்ளிரவில் புதிய தலைமை தேர்தல் ஆணையர் அறிவிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் நாட்டின் 26வது தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் பதவியேற்றுக் கொண்டார். 2029ம் ஆண்டு ஜன.26 வரை தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் பதவி வகிப்பார். இவரது பதவிக்காலத்தில், இந்த ஆண்டு இறுதியில் பீகார் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அடுத்த ஆண்டு, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடக்கிறது. மேலும், 2027-ம் ஆண்டு குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவர் தேர்தல்களையும் நடத்துவார். 2029 பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு ஞானேஷ் குமார் ஓய்வு பெறுவார்.
பதவியேற்புக்கு பிறகு பேட்டியளித்த அவர்; “நாட்டை கட்டியெழுப்புவதற்கான முதல் படி வாக்களிப்பதுதான். எனவே, 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் வாக்காளராக வேண்டும். வாக்களிக்க வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம், தேர்தல் சட்டங்கள், விதிகள் மற்றும் அதில் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, இந்தியத் தேர்தல் ஆணையம் வாக்காளர்களுடன் இருந்தது, இருக்கிறது, எப்போதும் இருக்கும்” என்று கூறியுள்ளார்.
The post நாட்டின் 26வது தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றுக் கொண்டார் ஞானேஷ்குமார் appeared first on Dinakaran.