மும்பை: நானா படேகர் மீதான பாலியல் புகார் வழக்கு தொடர்பான மனுவை விசாரித்த மும்பை நீதிமன்றம் நடிகை தனுஸ்ரீ தத்தாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ‘ஹார்ன் ஓகே பிளீஸ்’ என்ற இந்திப் படத்தில் நடித்தபோது, பாலிவுட் நடிகர் நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்ததாக ‘மீடூ’-வில் புகார் கூறியிருந்தார். தனுஸ்ரீ தத்தாவை பொருத்தமட்டில் இந்தி படங்கள் மட்டுமின்றி, தமிழில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக, ‘தீராத விளையாட்டு பிள்ளை’ போன்ற படத்திலும் நடித்துள்ளார்.
அதேபோல் நானா படேகரை பொருத்தமட்டில், தமிழில் பாரதிராஜாவின் ‘பொம்மலாட்டம்’, ரஜினியின் ‘காலா’ படங்களில் நடித்துள்ளார். மேற்கண்ட இருவரின் விவகாரம் குறித்து வந்த மும்பை போலீசார், ‘நானா படேகருக்கு எதிரான சாட்சியங்கள் ஏதும் இல்லை’ என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர். போலீசாரின் நடவடிக்கையை எதிர்த்து, தனுஸ்ரீ தத்தா சார்பில் மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதேபோல் நானா படேகரும் தனுஸ்ரீ தத்தா மீது மான நஷ்ட வழக்குத் தொடர்ந்தார். இவ்வாறாக இருவரும் நீதிமன்றத்திற்கு நடந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம், தனுஸ்ரீ தத்தா தொடர்ந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களையும் முடித்துக் கொண்டு தற்போது தீர்ப்பை வழங்கியுள்ளது.
அந்த தீர்ப்பில், ‘நானா படேகர் மற்றும் போலீசுக்கு எதிராக தனுஸ்ரீ தத்தா தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. கடந்த 2008ம் ஆண்டு பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கும், கடந்த 2018ம் ஆண்டு தனுஸ்ரீ அளித்த புகாருக்கும் தொடர்பில்லை. மேலும் அவர் கூறியுள்ள புகாரின்படி, எந்த குற்றச்சாட்டையும் நிரூபிக்கவில்லை. ஆதாரமும் இல்லை. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 468-இன்படி மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது’ என்று கூறியுள்ளது.
The post நானா படேகர் மீதான பாலியல் புகார் வழக்கு; நடிகை தனுஸ்ரீ தத்தாவின் மனு தள்ளுபடி: மும்பை நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.