திருமலை: யுகாதி பண்டிகையொட்டி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுவதால், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை மறுதினம் 4 மணி நேரம் சுவாமி தரிசனம் நிறுத்தப்படுகிறது. தெலுங்கு வருட பிறப்பான யுகாதி பண்டிகை மார்ச் 30ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் (தூய்மை பணி) நாளை மறுதினம் (25ம்தேதி) நடைபெற உள்ளது. இதன் காரணமாக, அன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை 4 மணி நேரத்துக்கு அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
மேலும் அஷ்டதல பாத பத்மாராதனை சேவை அன்று நடைபெறாது. மேலும் யுகாதி பண்டிகையன்று சஹஸ்ர தீப அலங்கார சேவையை தவிர மற்ற அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மார்ச் 25 மற்றும் 30ம் தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. மார்ச் 24 மற்றும் 29 ஆகிய நாட்களில் விஐபி தரிசனத்திற்காக எந்த பரிந்துரை கடிதமும் ஏற்கப்படாது. எனவே பக்தர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.
18 மணிநேரம் காத்திருப்பு;
கடந்த வாரம் சிபிஎஸ்இ பள்ளி தேர்வுகள் முடிந்த நிலையில் மற்ற பள்ளிகளுக்கும் தற்ேபாது கோடை விடுமுறை விடப்பட்டு வருகிறது. இதனால் திருமலையில் பக்தர்களின் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று ஒரேநாளில் 75,428 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 31,920 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ரூ.3.40 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இன்று அதிகாலை முதல் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 31 அறைகளும் நிரம்பியது. சுமார் 500 மீட்டர் தூரம் ஆழ்வார் ஏரி வெளிப்பகுதி வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 5 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.
The post நாளை மறுதினம் யுகாதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் நிறுத்தம் appeared first on Dinakaran.