புதுடெல்லி: மக்களவையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று பேசியதாவது: கிழக்கு லடாக்கில் படிப்படியாக துருப்புகள் அகற்றப்பட்டு, இறுதியாக டெப்சாப், டெம்சோக்கில் இருந்தும் படைகள் பின்வாங்கி உள்ளன. அடுத்ததாக மீதமுள்ள பிரச்னைகள் பற்றி பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என இந்தியா எதிர்பார்க்கிறது. சீன எல்லை விவகாரத்தை பொறுத்த வரையில், அனைத்து சூழலிலும் 3 முக்கிய கொள்கைகளை கடைப்பிடிப்பதில் இந்தியா தெளிவாக உள்ளது.
அவை, இரு தரப்பினரும் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டை (எல்ஏசி) கண்டிப்பாக மதிக்க வேண்டும், அதில் தற்போதைய நிலையை மாற்ற இரு தரப்பும் ஒருதலைப்பட்சமாக எந்த முயற்சியும் செய்யக்கூடாது, கடந்த காலத்தில் எட்டப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வுகள் முழுமையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதாகும். தற்போது படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, தீர்க்கப்படாமல் உள்ள பல விஷயங்களில் கவனம் செலுத்த உள்ளோம். இந்தியா, சீனா இடையே நல்லுறவு ஏற்பட எல்லையில் அமைதியை பேணுவது அவசியம் என்பதில் தெளிவாக இருக்கிறோம்.
எனவே, எல்லைப் பிரச்னைக்கு நியாயமான மற்றும் பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை கண்டறிய சீனாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை ஈடுபட இந்தியா உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு கூறினார். 1962ம் ஆண்டு போருக்கு பிறகு அக்சாய் சினில் 38,000 சதுர கிமீ இந்திய நிலப்பரப்பை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்திருப்பது உள்ளிட்ட பல சிக்கல்கள் இந்தியா, சீனா எல்லை விவகாரத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
The post நியாயமான, பரஸ்பரம் ஏற்கும் வகையில் சீன எல்லை பிரச்னைக்கு தீர்வு காண்பதில் உறுதி: மக்களவையில் ஜெய்சங்கர் தகவல் appeared first on Dinakaran.