துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவில் துபாயில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளுமே தலா 2 வெற்றிகளை பதிவு செய்து அரை இறுதி சுற்றுக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டன. இதனால் இன்றைய ஆட்டத்தின் முடிவு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. எனினும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தனது பிரிவில் முதலிடத்துடன் லீக் சுற்றை நிறைவு செய்யும். இந்திய அணி அரை இறுதி சுற்றில் தென் ஆப்பிரிக்கா அல்லது ஆஸ்திரேலியாவை சந்திக்கக்கூடும்.