புதுடெல்லி: அரியானா மாநில பா.ஜ தலைவராக இருப்பவர் மோகன்லால் படோலி. இவர் மீதும் பாடகர் ராக்கி மிட்டல் என்கிற ஜெய்பகவான் மீதும் இமாச்சலபிரதேச மாநிலத்தில் கூட்டுபாலியல் பலாத்கார வழக்கு பதிவாகி உள்ளது. அவர்கள் மீது டெல்லியை சேர்ந்த பெண்கள் புகார் அளித்துள்ளனர். இதை தொடர்ந்து கடந்த டிசம்பர் 13 அன்று இமாச்சல் சோலன் மாவட்டத்தில் உள்ள கசவுலி போலீஸ் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்விவரம் வருமாறு: இமாச்சலப்பிரதேச மாநிலத்துக்கு டெல்லியை சேர்ந்த பெண்கள் கடந்த 2023ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி சுற்றுலா சென்றனர். அவர்கள் கசவுலியின் மங்கி பாயிண்ட் சாலையில் உள்ளஇமாச்சலப்பிரதேச சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான ரோஸ் காமன் ஓட்டலில் தங்கியிருந்தார்கள். அப்போது அங்கு மோகன்லால் படோலியும், பாடகர் ராக்கி மிட்டல் என்ற ஜெய் பகவான் என்பவரும் அறிமுகமானார்கள். அவர்களில் மோகன்லால் படோலி தன்னை மூத்த அரசியல்வாதி என்றும், தனக்கு உயர்மட்ட செல்வாக்கு இருப்பதால் அரசு வேலை வாங்கித்தருவதாகவும் தெரிவித்தார். ஜெய் பகவான் அவரது ஆல்பத்தில் கதாநாயகியாக கூறினார்.
பின்னர் இருவரும் எங்களைப் புகழ்ந்து பேச ஆரம்பித்தார்கள். பின்னர் அவர்கள் எங்களுக்கு மதுவை வழங்கினர். நாங்கள் மறுத்துவிட்டோம். இருப்பினும் அவர்கள் எங்களை வலுக்கட்டாயமாக மது அருந்த வைத்தனர். அதன் பிறகு, எங்களை மிரட்டி, பாலியல் ரீதியாக துன்புறுத்தி, இருவரும் மாறி மாறி கூட்டு பலாத்காரம் செய்தனர். அவர்கள் எங்களை நிர்வாணமாக படம் எடுத்தனர். நிர்வாண வீடியோவும் பதிவு செய்து கொண்டனர். இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டினார்கள்.
அதன்பிறகு சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு, அவர்கள் எங்களை பஞ்ச்குலாவுக்கு அழைத்து, எங்கள் மீது பொய்யான கிரிமினல் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டினர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்கள் அவர்களின் மொபைல் எண்களில் இருந்து நீக்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். இதை தொடர்ந்து இமாச்சல் போலீசார் ஐபிசி பிரிவு 376டி (கும்பல் பலாத்காரம்) மற்றும் 506 (மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் மோகன்லால் படோலி, பாடகர் ராக்கி மிட்டல் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
* பா.ஜ நடவடிக்கை எடுக்காதது ஏன்? காங்கிரஸ் கேள்வி
இமாச்சலுக்கு சுற்றுலா சென்ற 2 பெண்கள் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் அரியானா மாநில பா.ஜ தலைவர் மோகன்லால் படோலி மீது பிரதமர் மோடி, பா.ஜ இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று மகிளா காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா கேள்வி எழுப்பினார். அவர் கூறுகையில்,’ மோகன்லால் படோலி மட்டுமல்ல, இதற்கு முன்பும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜ தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். பாஜ எம்பியாக இருந்த பிரிஜ்பூஷண் சரண் சிங், பாஜ எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் மீது பலாத்கார குற்றச்சாட்டுகள் உள்ளன. கர்நாடகாவில் கொடுமையான பலாத்கார குற்றவாளி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு தேர்தல் சீட்டு வழங்கி, அவருக்காக பிரசாரம் செய்ய பிரதமர் சென்றார்.
இப்போது அரியானா மாநில தலைவர் படோலி மீது ஜேபி நட்டா, பிரதமர் மோடி, அமித் ஷா நடவடிக்கை எடுக்கவில்லை. இதுபோன்ற கடுமையான குற்றச்சாட்டிற்கு பிறகும் அரியானா மாநில பா.ஜ தலைவர் பதவியில் அவர் எப்படி நீடிக்கிறார் என்று பாஜ பதில் சொல்ல வேண்டும். ஒருபுறம் அரியானா பாஜ தலைவர் மீது கூட்டு பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜ தலைவர் அஜித் பால் சிங் சவுகான் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற சூழலில் பிரதமர் மோடி அமைதியாக இருக்கிறார்’ என்றார்.
* ஆதாரமற்ற குற்றச்சாட்டு
கூட்டு பலாத்கார புகார் தொடர்பாக அரியானா பா.ஜ மாநில தலைவர் மோகன்லால் படோலி கூறும்போது,’இதெல்லாம் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள். அப்படி எதுவும் இல்லை. இது எதைப் பற்றியது என்று எனக்கு எதுவும் தெரியாது. டெல்லியில் நடைபெறவுள்ள தேர்தல் காரணமாக இதுபோன்ற போலி எப்.ஐ.ஆர். பதிவு செய்து மக்களை ஏமாற்றலாம்’ என்றார். பாடகர் ராக்கி மிட்டல் எந்த பதிலும் அளிக்கவில்லை.
The post நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல் அரியானா பா.ஜ மாநில தலைவர் மீது கூட்டு பலாத்கார வழக்குப்பதிவு: ஆபத்தான நிலையில் மகன், மகளுக்கு சிகிச்சை appeared first on Dinakaran.