புதுடெல்லி: உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் எரிந்த நிலையில் கைப்பற்றிய பணத்தில் மற்றொரு பெண் நீதிபதிக்கும் ெதாடர்பு இருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரபூர்வ இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் போது, பாதி எரிந்த நிலையில் 4 முதல் 5 மூட்டைகளில் கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து விளக்கமளிக்குமாறு யஷ்வந்த் வர்மாவுக்கு ெடல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உபாத்யாய கடிதம் அனுப்பிய நிலையில், அந்த பணம் தனக்குச் சொந்தமானது அல்ல என்று நீதிபதி யஷ்வந்த் வர்மா கூறியுள்ளார்.இதுதொடர்பாக விசாரணை நடத்த 3 நீதிபதிகள் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நீதிபதி யஷ்வந்த் வர்மா நீதித்துறைப் பணிகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதி யஷ்வந்த் வர்மாவை மாற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது. ஆனால் அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதி யஷ்வந்த் வர்மாவை மாற்றுவதற்கு அலகாபாத் வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறது.
‘நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டாம் என்று தலைமை நீதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. எந்த நீதிமன்றமும் குப்பை கொட்டும் இடம் அல்ல. நடவடிக்கைகள் முடியும் வரை அவர் உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் இருக்க வேண்டும்’ என்று அலகாபாத் வழக்கறிஞர்கள் சங்கம் கூறியுள்ளது.
இந்நிலையில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கணக்கில் வராத பணம், அவருக்கு மட்டும் சொந்தமானது அல்ல என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. கட்டுக்கட்டாக பதுக்கப்பட்ட பணத்திற்கு வேறொரு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் நீதிபதியின் பங்களிப்புகளும் உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உளவுதுறை வட்டாரங்கள் கூறுகையில், ‘நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கைப்பற்றப்பட்ட பலகோடி பணம் தொடர்பான விசாரணையில், அந்தப் பணம் நீதித்துறையில் உள்ள சிலருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. மற்றொரு உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த பெண் நீதிபதிக்கும் அந்தப் பணத்தில் பங்குண்டு என்று தெரிகிறது. அதனால் நீதித்துறையில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் தொடர்பில் பிற நீதிபதிகளுக்கும் தொடர்பு இருப்பதால் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
பெண் நீதிபதியின் பங்கு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அந்தப் பணம் நீதித்துறைப் பணியுடன் தொடர்புடையதா? அல்லது அளவுக்கு அதிகமாக குவிக்கப்பட்ட சொத்தின் ஒரு பகுதியா? என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த விவகாரத்தில் உள் விசாரணை கமிட்டி விசாரணையைத் தொடங்கி உள்ளது. நீதிபதி வர்மாவின் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணத்திற்கு மற்ற நீதிபதிகளுடன் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டால், அது நீதித்துறையின் வெளிப்படைத்தன்மை குறித்த கேள்வி எழுப்பும்’ என்று கூறின.
The post நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் எரிந்த நிலையில் கைப்பற்றிய பணத்தில் மற்றொரு பெண் நீதிபதிக்கு தொடர்பு..? விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் appeared first on Dinakaran.